எதிரிகளிடம் மாட்டிக் கொண்டால் உடனடியாக உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும். மற்ற உளவாளிகள் மாட்டிக் கொண்டவரைக் காப்பாற்ற முற்படாமல் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். இப்படித்தான் சரஸ்வதி ராஜாமணிக்குச் சொல்லித் தரப்பட்டது. ஆனால் தன் கூட்டாளியை விட்டுப்போக சரஸ்வதிக்கு மனமில்லை. உள்ளே சென்றால் தனது உயிருக்கும் உத்திரவாதம் இல்லை.
என்ன செய்தார் சரஸ்வதி?
சரஸ்வதிக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் ராஜாமணி. திருச்சிராப்பள்ளியைப் பூர்வீகமாகக் கொண்ட அவரது தந்தை ரங்கூனில் தங்கச் சுரங்கத்தின் அதிபதியாக இருந்தார். பர்மாவில் (மியான்மர்) பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்த அவர் இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்காக ஏராளமானப் பொருளுதவிகளைச் செய்து வந்தார்.
ராஜாமணியின் குடும்பம் மஹாத்மா காந்தியின் அகிம்சைப் போராட்டங்களை ஆதரித்தது. ஆனால் ராஜாமணி சிறுவயதிலேயே, பொம்மைத் துப்பாக்கியை வைத்து ஆங்கிலேயர்களைக் குறிபார்த்துச் சுடும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்.
பதின்ம வயதில் நேதாஜியின் ஆக்ரோஷப் பேச்சுகளால் கவரப்பட்டார். அவருடைய புகைப்படங்களையும், செய்தித்தாள்களில் அவரைக் குறித்து வந்த கட்டுரைகளையும் கத்தரித்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார்.
நேதாஜி, இந்திய தேசிய இராணுவத்துக்கு நிதி திரட்டுவதற்காக ரங்கூனுக்குச் சென்றார். அவர்கள் அமைத்திருந்த கூடாரத்துக்குச் சென்று, தன்னிடமிருந்த தங்க வைர நகைகளைத் தானமாகக் கொடுத்தார் ராஜாமணி.
ஒரு சிறுபெண் ஏராளமான நகைகளைக் கொடுத்திருக்கிறாள் என்கிற விஷயம் நேதாஜிக்குத் தெரியவந்தது. சிறுபெண் அறியாமல் கொடுத்திருக்கலாம் என எண்ணி ராஜாமணியின் வீட்டுக்குச் சென்றார். அவரது தந்தையிடம் நகைகளைத் திருப்பிக் கொடுத்தார்.
ஆனால் ராஜாமணி, ‘இவை நான் மனமுவந்து விடுதலைப் போராட்டத்துக்காகக் கொடுத்தவை, இவற்றை என்னால் திரும்பப் பெற்றுக்கொள்ளவே முடியாது’ என உறுதியாக மறுத்துவிட்டார். விடுதலைப் போராட்டத்தில் தனக்கிருக்கும் ஆர்வத்தையும், இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றும் விருப்பத்தையும் தெரிவித்தார்.
அவரது எண்ணத்தைக் கண்டு வியந்த நேதாஜி, ‘லட்சுமி போவாள் வருவாள், ஆனால் சரஸ்வதி ஒருவரிடம் வந்தால் திரும்பிச் செல்ல மாட்டாள், உன்னிடத்தில் இருக்கும் சரஸ்வதி அற உணர்வையும், துணிச்சலையும் வழங்கி இருக்கிறாள். இனிமேல் நான் உன்னை சரஸ்வதி ராஜாமணி என்றே அழைக்கப் போகிறேன்.’ என்று பாராட்டிப் பேசியிருக்கிறார். நேதாஜி வைத்த சரஸ்வதி, ராஜாமணியின் பெயரோடு நிரந்தரமாகச் சேர்ந்துகொண்டது.
சரஸ்வதி தனது பதினாறாவது வயதில், இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலகப்போரில் அடிபட்ட வீரர்களுக்கு உதவும் செவிலியர்பணிதான் முதலில் அவருக்குத் தரப்பட்டது.
தனது துடிப்பான செயல்களால் விரைவிலேயே ஜான்சி ராணி படைப்பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். கேப்டன் லக்ஷ்மி சேஹலிடம் இராணுவப் பயிற்சி பெற்றார்.
முடியைக் குட்டையாகக் கத்தரித்துக் கொண்டு, ஆண் சட்டையை அணிந்து ‘மணி’ என்னும் சிறுவனாக மாறினார். தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரிட்டன் அதிகாரிகளுடைய வீடுகளுக்குள் நுழைந்தார். வீட்டைச் சுத்தம் செய்வது துணிகளை வெளுப்பது, தோட்டத்தைக் கவனிப்பது போன்ற பணிகளைச் செய்யும் பாவனையில் இரகசியமாக அவர்கள் நடவடிக்கைகளை உளவு பார்த்துக்கொண்டும் இருந்தார். உளவுத் தகவல்கள் கூட்டாளிகளின் மூலமாக நேதாஜியைச் சென்றடைந்தன.
துரதிர்ஷ்டவசமாக சரஸ்வதியின் கூட்டாளுள் ஒருவரான துர்கா, பிரிட்டன் அதிகாரிகளிடம் அகப்பட்டுக் கொண்டாள்.
கூட்டாளிகள் மாட்டிக்கொண்டால், மற்றவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் தன் கூட்டாளியை அப்படியே விட்டுப்போக சரஸ்வதிக்கு மனமில்லை. துர்காவைக் காப்பாற்ற விரைவாகத் திட்டம் தீட்டினார்.
பர்மிய நடன மங்கையைப் போல் உடையணிந்து கொண்டு சிறைச்சாலைக்குள் சென்றார். காவலர்கள் பேசிக் கொண்டிருந்தபோது கையோடு எடுத்துச் சென்ற போதை மருந்தை அவர்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்தார். தண்ணீரைக் குடித்த காவலர்கள் மயங்கிச் சரிந்தனர். துர்காவும் சரஸ்வதியும் தப்பியோடினர்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த காவலர்கள் இரு பெண்களையும் துரத்திச் சென்றனர். காவலர் ஒருவர் சுட்ட குண்டு சரஸ்வதியின் வலதுகாலைத் துளைத்தது. அதற்குமேல் ஓடி முடியாததால் அருகிலிருந்த மரத்தின் மீது இருவரும் ஏறிக்கொண்டனர். காலில் வடிந்த குருதி, பசி, தாகம் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு இரண்டு நாள்கள் அங்கேயே கழித்தனர்.
மூன்றாவது நாள் ரங்கூனுக்குத் தப்பியோடி தங்களது இராணுவக் கூடாரத்தைச் சென்றடைந்தனர். நேதாஜி, சரஸ்வதியின் துணிச்சலை வெகுவாகப் பாராட்டினார். ஜப்பானிய அரசர், சரஸ்வதிக்குப் பதக்கமும், பணப்பரிசும் வழங்கி கௌரவித்தார்.
இவை அனைத்துமே இரகசியமான உளவுப் பணிகள் என்பதால் சரஸ்வதியின் கூற்றைத் தவிர இவற்றை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்திய தேசிய இராணுவம் கலைக்கப்பட்டது. சரஸ்வதியின் குடும்பம் ரங்கூனை விட்டு இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தது.
சில ஆண்டுகள் திருச்சியில் வசித்த பின்னர் சென்னைக்கு இடம்பெயர்ந்தார் சரஸ்வதி. சுமார் இருபத்தைந்து ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகே அவருக்குத் தியாகிகள் ஓய்வூதியம் கிடைக்கப் பெற்றது.
ஒரு காலத்தில் மாடமாளிகையில் வாழ்ந்தவர், எந்த அடையாளமும் இல்லாமல் வாடகை வீட்டில் ஓய்வூதியத்தை வைத்து மட்டுமே ஜீவித்துக் கொண்டிருந்தார். 2005-ஆம் ஆண்டு தமிழக அரசு அவருக்குச் சொந்தமாக வீட்டையும், கணிசமானளவு தொகையையும் வழங்கியது.
வீடு முழுக்க நேதாஜியின் புகைப்படங்களை மாட்டி வைத்து, வலது கால் ஊனத்தைப் பெருமையாகச் சுமந்து, இராணுவத்தில் உளவாளியாக இருந்த நாள்களை மட்டுமே இறுதிவரை நினைவில் தேக்கி வைத்திருந்த சரஸ்வதி, தனது தொண்ணூறாவது வயதில் காலமானார்.