தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் காஜல் அகர்வால். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்த அவர் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்திவரும் காஜல் கடைசியாக; இந்தியன் 2, சிக்கந்தர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவரது பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மும்பையை சேர்ந்த காஜல் அகர்வால் தமிழில் நடித்த முதல் இரண்டு படங்களான பழனி, பொம்மலாட்டம் ஆகிய படங்கள் சரியாக போகவில்லை. அதுவும் பொம்மலாட்டம் படத்தின் இயக்குநர் பாரதிராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலிரண்டு படங்கள் சரியாக போகாவிட்டாலும் அவருக்கு வாய்ப்புகள் வர தொடங்கின. தொடர்ந்து, தெலுங்கில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்ததும் ராஜமௌலி இயக்கத்தில் மஹதீரா படத்தில் நடித்தார்.
ராம்சரண் ஹீரோவாக நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் அந்தப் படம் மாவீரன் என்ற பெயரில் வெளியாகி ஹிட்டாக காஜலை முழுமையாக உபயோகப்படுத்த ஆரம்பித்தது கோலிவுட்.கோலிவுட் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகமான டோலிவுட்டும் காஜலுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது.
தமிழில் சின்ன சின்ன ஹீரோக்களுடன் நடித்துவந்த அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் ஹீரோயினாக கமிட்டானார். அதில் அவரது நடிப்பும் அழகும் ரசிகர்களை கவர்ந்துவிட சூர்யா, அஜித்,கார்த்தி உள்ளிட்டோருடன் நடிக்க ஆரம்பித்தார். இவற்றில் அஜித்துடன் நடித்த விவேகம் படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி க்ளைமேக்ஸ் காட்சியில் அவரது நடிப்பை வைத்து சிலர் ட்ரோலும் செய்தனர்.
இந்தச் சூழலில் அவர் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜல் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளார். அவருடன் நேரம் செலவழித்துவந்த காஜல் அக்ரவால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து கடைசியாக இந்தியன் 2, சிக்கந்தர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக ராமாயணா படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் அந்தப் பேட்டியில், "சினிமா துறையில் பெண்களை பலர் நடத்தும் விதத்தில் எனக்கு அதிருப்தி இருக்கிறது. நடிகர்களை காட்டிலும் நடிகைகள்தான் அதிக சவாலை எதிர்கொள்கிறார்கள். அதாவது, நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டாலே அவர்களை எல்லோரும் ஒதுக்க தொடங்கிவிடுகிறார்கள்.நடிகைகளின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தாலும் அதுதான் நடக்கிறது. ஆனால் திறமையை எப்போதும் அணை போட்டு தடுக்க முடியாது. திறமை உள்ளவர்கள் எந்த வயதில் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்பதை இங்கே பலரால் புரிந்துகொள்ளப்படவே இல்லை" என்றார்.
