Feed Item
·
Added article

திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார் என்று ‘தாய் கிழவி’ விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார்.

சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசிவிட்டு சிவகார்த்திகேயன், “இயக்குநர் சிபிக்கு நன்றி. தலைவர் ரஜினி பட இயக்குநர் நீங்கள், இவ்வளவு நேரம் இருந்து விழாவை சிறப்பித்தற்கு நன்றி. நாம் இருவரும் தான் சுதனுடன் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தது. என்னை விட்டுவிட்டு நீ மட்டும் தப்பித்துவிட்டாய்.

நான் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன். நமக்கான ஒப்பந்தம் இருக்கிறது, மீண்டும் வரவேண்டும். சூரி அண்ணனுக்கு நன்றி. 30 ஆண்டுகள் கழித்துக் கூட ராதிகா – ஸ்ரீப்ரியா நட்பு மாதிரி நமது நட்பு இருக்க வேண்டும். இன்று நீங்கள் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக மாறியிருக்கிறீர்கள்.

சினிமாவில் ஏதேனும் ஒரு ரோலில் நடித்து விட வேண்டும் என்று வந்தவன் நான். அப்படியே ஹீரோ வாய்ப்பு வந்தது. மக்கள் கைதட்டி வெற்றி நாயகன் என்று சொன்னவுடன், நான் நல்லாயிருப்பதை தாண்டி நண்பர்களுக்கு ஏதேனும் பண்ண வேண்டும் என தோன்றியது.

அப்படி நண்பன் அருண்ராஜா காமராஜ்க்காக ஆரம்பிக்கப்பட்டது தான் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ். பெண்கள் மிகவும் வலிமை மிக்கவர்கள் என்பதை சொல்ல வேண்டும் என உருவாக்கப்பட்டது தான் ’கனா’. உலகில் முதன்முதலாக பெண்கள் கிரிக்கெட்டை மையாக வைத்து எடுக்கப்பட்ட படம் அது.

யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் தாண்டிப் போகவோ, யாரையும் எதிர்க்கவோ, யாரையும் காலிப் பண்ணவோ நான் வரவில்லை. எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதை செய்ய விடுங்கள் என்று தான் கேட்டுக் கொள்கிறேன். இதுவரை ரீமேக் படங்கள் செய்ததில்லை, கதை கேட்டு படங்கள் பண்ணுகிறேன்.

எனது படங்கள் வெற்றி, தோல்விக்கு நான் பொறுப்பு என நம்புகிறேன். மக்கள் எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகளை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார். அந்த தடைகளை நீக்கிவிட்டால் இன்னும் நான்கு சிவகுமார் முருகேசனை கூட்டிக் கொண்டு வருவேன்” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.

  • 57