நடிகர் திலகம் தன் துணைவியாரோடு தஞ்சைக்கு வருகிறார். காரில் போய்க் கொண்டு இருக்கும் போது ஒரு தெரு முனையில் வண்டியை நிறுத்தச் சொல்லி கட்டளையிடுகிறார்.. வண்டியிலிருந்து இறங்கி தெருவில் நடந்து செல்கிறார் தன் துணைவியாருடன்.. ஒரு சாதாரண குடிசை முன் நிற்கிறார். நடிகர் திலகம் வந்ததையறிந்து தெருவில் மக்களின் ஆரவாரங்கள்...
ஏதோ சத்தம் கேட்கிறதே என எண்ணி வீட்டிற்குள் இருந்து ஒருவர் எட்டி பார்க்கிறார்.. தன் வீட்டின் வாசலில் வந்து நிற்கும் நடிகர் திலகத்தையும் அவர் மனைவியையும் பார்த்து வார்த்தைகள் வராமல் தவிக்கிறார். கண்களில் ஆனந்தக் கண்ணீர்.. "அண்ணே வாங்கண்ணே" என்கிறார்.. அதற்குள் வீட்டிற்குள் இருந்து பத்து நாட்களுக்கு முன் மணமுடித்த தம்பதியினர் வருகிறார்கள்.. அவர்கள் இருவரும் காலில் விழுந்து வணங்குகிறார்கள். தம்பதி சகிதம் ஆசி வழங்குகிறார்கள். டிரைவர் இரண்டு பைகளை கொண்டு வந்து தருகிறார். அதனை மணமக்கள் கையிலே கொடுக்கிறார் கமலாம்மாள். இரண்டொரு வார்த்தை பேசி விட்டு நகர்கிறார்கள். அப்பொழுது குடிசை வீட்டின் உரிமையாளர் நடிகர் திலகத்திடம் "அண்ணே ஏதாவது சாப்பிட்டு விட்டு போங்க" என்று சொல்கிறார். உடனே தன் மனையாளை பார்க்கிறார்.
தண்ணீர் வாங்கி கைகளை அலம்பி விட்டு குனிந்து குடிசைக்குள் நுழைந்து தரையில் அமர்கிறார்கள். வீட்டில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் சாப்பிட அழைத்து விட்டோமே என்று பதட்டத்தில் அழைத்தவர் முழிக்க பரவாயில்லை இருப்பதை சாப்பிடுகிறேன் என்று சொல்லி அவர்களால் உள்ளன்போடு பரிமாறப்பட்ட பதார்த்தங்களை ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்கள்.
தன் மகனின் திருமண விழாவிற்கு தனக்கு அழைப்பிதழ் அனுப்பிய ஒரு சாதாரண ரசிகனை ஞாபகத்தில் வைத்து தஞ்சை வந்த நேரத்தில் அவர்களின் இல்லம் சென்று ஆசி வழங்கியதோடு மட்டுமில்லாமல் தரையில் அமர்ந்து சாப்பிட்டு ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய பாசமிகு நடிகர் திலகமும் கமலாம்பாளும்..
அந்த ரசிகர் ஒரு சலவை தொழிலாளி என்பது கூடுதல் தகவல்.
