படம் ரிலீஸ் ஆனால் சேலை கட்டிக்கிறேன்; சவால் விட்ட மதுரை தி.மு.க பிரபலம், முதல் காட்சி அங்கேயே வெளியிட்ட எம்.ஜி.ஆர்!
மதுரையில் அவர் சேலை கட்டிக்கொள்வதாக பேசியதால், படத்தின் முதல் காட்சி மதுரையில் தான் திரையிடப்பட வேண்டும் என்று முடிவு செய்த எம்.ஜி.ஆர், மீனாட்சி தியேடடரில் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் நடித்த ஒரு திரைப்படம் வெளியானால் நான் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று தி.மு.க பிரமுகர் ஒருவர் சொல்ல, அவரை எதிர்த்து தனது படத்தை மதுரையிலேயே திரையிட்டு வெற்றி கண்டுள்ளார் எம்.ஜி.ஆர். இந்த படம் இன்றுவரை பேசப்படக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர், தொடர்ந்து 3 முறை முதல்வர் இருக்கையில் அமர்ந்த இவர், இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பன்முக திறமையுடன் வலம் வந்தார், திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர், முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா இறந்தவுடன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பிறகு 1972-ம் ஆண்டு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
கட்சி தொடங்கினாலும், சினிமாவில் தனது இருப்பை வைத்திருந்த எம்.ஜி.ஆர், 1973-ம் ஆண்டு உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட்டார். இந்த படத்தின் பணிகள் தொடங்கும்போது ஆட்சியில் இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தினர் படப்பிடிப்புக்கு தடையாக இருப்பார்கள் என்பதால், படத்தின் படப்படிப்பை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கிய எம்.ஜி.ஆர், அந்த படத்தை தானே இயக்கி தயாரித்து நாயகனாக நடித்திருந்தார். படம் பெரிய வெற்றியை பெற்றிருந்துது.
இந்த படத்திற்கு, பல சிறப்பு அம்சங்கள் இருக்கிறது, மதுரையில் முத்து என்பவர் மு.க.அழகிரியை போல் செல்வாக்கு மிகுந்தவர். அவர் ஒரு மேடையில் பேசும்போது, எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் ஆனால் நான் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று ஒரு மேடையில் பேசியுள்ளார். இதனால் படத்தை தடுக்க எதோ சதி நடக்கிறது என்பதை புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், இதுகுறித்து விசாரித்தபோது, படத்தின் கலர் பணிகள் நடக்கும்போது அந்த நெகடீவ்களை எரிப்பதற்காக முயற்சிகள் நடப்பதாக தெரியவந்தது.
இந்த மேடைப்பேச்சு முடிந்து சில நாட்கள் கழித்து செய்தித்தாளின், உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறி தியேட்டரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இதனால் மதுரை முத்து அதிர்ச்சியாகியுள்ளார். மதுரையில் அவர் சேலை கட்டிக்கொள்வதாக பேசியதால், படத்தின் முதல் காட்சி மதுரையில் தான் திரையிடப்பட வேண்டும் என்று முடிவு செய்த எம்.ஜி.ஆர், மீனாட்சி தியேடடரில் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிட்டுள்ளார்.
திரைப்படம் வெளியாக அரைமணி நேரத்திற்கு முன்பாக, மும்பையில் இருந்து தனி விமானத்தில் படப்பெட்டிகள் வந்துள்ளது. இந்த படப்பெட்டியை யாரும் கைப்பற்றிவிட கூடாது என்பதால், பவுன்சர்களை பாதுகாப்பாக வைத்துள்ளார். மேலும் இந்த படத்தை வெளியிட ஆளும்கட்சியே, தொல்லை கொடுக்கிறது என்பதால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏதாவது ஒரு பாட்டு முதல் காட்சியில் வர வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் எம்.ஜி.ஆர். அதற்காக எழுதிய பாடல் தான் ‘வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படி தோற்கின் எப்படை வெல்லும்’.
இந்த பாடல் ஓடும்போது திரையில் அதிமுக கொடி பறக்கும். இந்த படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. தொடர்ந்து 216 வாரங்கள் திரையில் ஓடி வரலாற்று சரித்திரத்தை உருவாக்கியது. மேலும் இந்த படத்தை போஸ்டர் அடிக்காமல் நான் ரிலீஸ் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டதாகவும், நடிகர் பாண்டு டிசைன் செய்த, ஸ்டிக்கர் மூலம் தான் இந்த படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.