Feed Item
·
Added a news

கனடாவில் வம்சாவளி அடிப்படையில் குடியுரிமை பெறும் புதிய சட்டத்தின் கீழ் சான்றிதழ்களைப் பெற்ற நூற்றுக்கணக்கானோரின் குடியுரிமை சான்றிதழ்களை மத்திய அரசு திடீரென திரும்பக் கேட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டு வம்சாவளியினர் தங்களது மூதாததையர்களாக இருக்கிறார்கள் என்பதற்காகவே ஒருவர் தானாகவே குடியுரிமை பெற தகுதியானவர் என்று அர்த்தமாகாது என குடிவரவுத் துறை அமைச்சர் லீனா டயப் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தலைமுறையிலும் உங்களுக்கும் கனடாவுக்குமான தொடர்பை நீங்கள் திட்டவட்டமாக நிரூபிக்க வேண்டும் எனவும் வெறும் மரபியல் இணையதளங்களின் (Genealogy websites) தரவுகள் மட்டுமே இதற்குப் போதாது எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின்படி, டிசம்பர் 15, 2025-க்கு முன் பிறந்தவர்கள், தங்களின் முன்னோர்கள் கனேடியர்கள் என்பதை நிரூபித்தால் குடியுரிமை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த வார இறுதியில் இந்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை சான்றிதழ் பெற்ற "குறிப்பிட்ட எண்ணிக்கையிலான" நபர்களுக்கு கனடா குடிவரவுத் துறை அதிர்ச்சியூட்டும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், தங்களிடம் உள்ள குடியுரிமை சான்றிதழ்களை உடனடியாக அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அசல் ஆவணங்களையோ அல்லது அவற்றை சமர்ப்பிக்க முடியாததற்கான உரிய விளக்கங்களையோ தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

அரசின் இந்த திடீர் முடிவால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

  • 13