கனடாவில், ஈழத் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண மருத்துவமனைகளுக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு கடந்த 20ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெலா மார்டின் மற்றும் வட மாகாண ஆளுநர் என். வேதநாயகன், இந்த குருதி சுத்திகரிப்பு இயந்திரங்களை நன்கொடையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று இருந்தனர்.
இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்த இலங்கையர்கள் அந்நாட்டுக்கு பல்வேறு வகையில் சேவைகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான கனடிய தூதுவர் இஸபெல்லா மார்டின் தெரிவித்துள்ளார்.
கனடாவின் வெற்றிக்கு புலம்பெயர் இலங்கையர்களின் பங்களிப்பு மகத்துவமானது என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கனடிய புலம்பெயர் தமிழர்கள் தாயகத்திற்கு கொடைகளை வழங்குவதும் தங்களது திறமைகளை வழங்குவதும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கனடாவில் பெற்றுக் கொண்டவற்றை தாயக சமூகத்திற்கு வழங்குவது போற்றுதற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தருணம் பெரும் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கனடாவின் சார்பில் இந்த நன்கொடை வழங்குவதற்கு வழங்கும் நிகழ்வுடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கனடிய வாழ் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஈழத்து தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக வட மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கனடாவில் கடின உழைப்பில் பெற்றுக் கொள்ள பட்ட பணம் தாயகத்தில் தேவைகள் உடையவருக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் சமூகத்திடம் தாம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் சமூகத்தினர் தாயகத்திற்கு தொழில்நுட்பத்தையும் அறிவையும் வழங்க முடியும் எனவும் மருத்துவமனைகளுக்கு உதவுமாறு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எமது மருத்துவமனைகளுக்கு காணப்படும் முக்கியமான தேவைப்பாடுகளை கண்டறிந்து பேண்தகு அடிப்படையில் அவற்றை பூர்த்தி செய்யுமாறு புலம்பெயர் சமூகத்திடம் கோருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் புலம்பெயர் சமூகத்தினர் இலங்கையில் முதலீடு செய்வதில் எதிர்நோக்கிய நிர்வாக மற்றும் ஏனைய சிக்கல்களை களைவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
வட மாகாணத்தை முதலீடுகளுக்கு சிறந்த ஓர் மாகாணமாகவும் சமூக பொறுப்புடைய ஒரு மாகாணமாகவும் மாற்றுவதற்கு முனைப்பு காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொடையாளர்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டுமே பெருந்தொகை பணத்தை நம்பி கொடுப்பார்கள் எனவும் தற்போதைய சமூகத்தில் ஏமாற்று பேர்வழிகள் இருக்கிறார்கள் எனவும் இந்த கொடையாளி மீது நம்பிக்கை கொண்டு பெருந்தொகை பணம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்கொடையாளர்களின் சேவை தொடர வேண்டும் எனவும் வடமகாணத்திற்கு தொடர்ந்து சேவைகள் ஆற்றப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.