தமிழ் சினிமாவில் சில நடிகைகள் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மக்கள் மனங்களில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வரிசையில் குறைந்த படங்களில் நடித்து அதிகம் கவனிக்கப்படாமல் போனவர்தான் நடிகை உமா சங்கரி. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக திகழ்ந்த சுமித்ராவின் மகளான இவர், 2000 ஆம் ஆண்டு சீமான் இயக்கிய ‘வீரநடை’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து கலகலப்பு, சொக்கத் தங்கம், விகடன், சூரியன், தென்றல், கோவை பிரதர்ஸ், அடைக்கலம், மணிகண்டா, ரசிகர் மன்றம், பாக்கியலட்சுமி போன்ற பல படங்களில் நடித்தார். இறுதியாக அவர் அஜித் நடித்த ‘வலிமை’ படத்தில் சிறு வயது சுமித்ரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் ‘சொக்கத்தங்கம்’ மற்றும் ‘கோவை பிரதர்ஸ்' படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்ததுள்ள அவர் 2006 ஆம் ஆண்டு திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தினார்.
இந்த நிலையில் அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என எதுவுமே தெரியாமல் இருந்து வந்தது. மேலும் சமூக வலைதளங்களிலும் பெரிய அளவில் அவர் ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்தார்.
தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.