Feed Item
·
Added article

ரிச்சர்ட் ரிஷி, ரக் ஷனா இந்து சுதன் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘திரவுபதி 2’. மோகன் ஜி இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். நேதாஜி புரொடக் ஷன்ஸ், சோழ சக்ரவர்த்தி மற்றும் ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பாடகி சின்மயி ‘எம்கோனே’ என்ற பாடலை பாடியிருந்தார்.

இந்தப் பாடலை பாடியதற்காக சின்மயிக்கு எதிராக சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து மோகன் ஜி படத்தில் பாடியதற்காக சின்மயி மன்னிப்புக் கேட்டிருந்தார். என்னுடைய கொள்கைக்கும் இப்படத்தின் கருத்துக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது என்றும் என் சித்தாந்தத்துக்குப் பொருந்தாததால் வருந்துகிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.

‘திரவுபதி 2’ படத்தில் சின்மயி பாடிய எம்கோனே பாடல் இடம்பெறாது என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது, “எம்கோனே பாடல் கண்டிப்பாகப் படத்தில் இருக்கும். ஆனால் சின்மயி குரலில் இருக்காது. அவருக்குப் பதில் வேறொரு பாடகி குரலில் வருகிறது. போன வாரம் வரை சின்மயின் பதிலுக்காக நேரம் கொடுத்திருந்தேன். இயக்குநர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறேன்.

அதேபோல் தயாரிப்பாளரும் அவரது சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். எங்கள் படத்தைப் பொதுவெளியில் களங்கம் ஏற்படுத்தியதற்காக நடவடிக்கை எடுக்கக் கேட்டுள்ளோம். இரண்டு புகாருமே ஃபெப்சிக்கு சென்றிருக்கிறது. இது தொடர்பாக சின்மயிடம் ஃபெப்சி கேள்வி கேட்டுள்ளது” என்றார்.

  • 574