கனடாவின் ஒண்டாரியோ மாகாணம் முழுவதும் சிறுவர்களுக்கு எதிரான இணையவழி பாலியல் சுரண்டலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விரிவான நடவடிக்கையைத் தொடர்ந்து, 63 சந்தேக நபர்கள் மீது 200-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
'புராஜெக்ட் டைம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிறப்புத் திட்டத்தின் மூலம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை தயாரித்தல், கைவசம் வைத்திருத்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களால் இலக்கு வைக்கப்பட்ட 51 பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உரிய உதவிகளும் வழங்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 264 குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் "தங்கள் சமூகத்தில் பொறுப்பான மற்றும் நம்பிக்கை தரும் பதவிகளில் இருந்தவர்கள்" ஆவர். 8 பேர் ஏற்கனவே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள். மொத்தம் 814 மின்னணு சாதனங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 154 விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒண்டாரியோ மாகாணக் காவல் துறை தெரிவித்துள்ளது.
சிறுவர் பாலியல் சுரண்டல் தொடர்பான ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், உள்ளூர் காவல்துறையையோ அல்லது cybertip.ca என்ற இணையதளத்தையோ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.