மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் கோஹரா என்ற கிராமத்தில் பிறந்தவர் மகேஷ் தாஸ். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாத்தா ருப்தார் ஒரு சமஸ்கிருத பண்டிதர். பேரனுக்கு வளமான கல்வியை வழங்கினார். கூர்மையாகச் சிந்திக்கக்கூடியவராக வளர்ந்தார் மகேஷ் தாஸ்.
பேச்சுத்திறனில் அசாத்திய திறமை பெற்றிருந்தார். எந்த விஷயத்தையும் நுணுக்கமாகப் பார்த்து, அதன் உட்கூறு களைப் புரிந்துகொள்வதில் அவருக்கு இணையாக இன்னொருவரைச் சொல்வது கடினம். தன்னுடைய சாதுரியம் நிறைந்த நடவடிக்கைகளால் தான் சந்திக்கும் எவரையும் வசீகரித்துவிடுவார். அவர் பேச ஆரம்பித்துவிட்டாலே கூட்டம் கூடிவிடும்.
முகலாயப் பேரரசர் அக்பர் ஒருமுறை தன்னுடைய குதிரைகள் பூட்டிய ரதத்தில் நகரை வலம்வந்து கொண்டிருந்தார்.
ஓரிடத்தில் மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். மன்னர் வருவதைக் கூடக் கவனிக்காமல் வேறு எதையோ ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். வீரர்கள் புகுந்து கூட்டத்தை ' விலக்கினர். அங்கே மகேஷ் தாஸ் உற்சாகம் நிறைந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்.
நகைச்சுவை. குறும்பு. சாதுரியம். கிண்டல் கேலி எல்லாம் கலந்த கலவையாக இருந்தது மகேஷ் தாஸின் பேச்சு. சில நிமிடங்நிகளிலேயே அந்தப் பேச்சு அக்பரையும் கவர்ந்துவிட்டது.
'உங்களுடைய பேச்சும் புத்திசாலித்தனமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஆக்ராவுக்கு வரலாம். அரண்மனையில் என்னைச் சந்திக்கலாம். இதோ, இந்த மோதிரத்தை வைத்துக்கொள்ளுங்கள் .இதை அரண்மனைக் காவலரிடம் காட்டினால் நீங்கள் என்னைச் சந்திக்க அனுமதி கிடைக்கும்' என்று சொல்லிவிட்டு அக்பர் புறப்பட்டார்.
மகேஷ் தாஸுக்கு மிகுந்த மகிழ்ச்சி. தன்னுடைய ஏழைமை நீங்க வழி கிடைத்துவிட்டதாக நினைத்து ஆனந்தம் அடைந்தார். அடுத்த சில நாள்களிலேயே ஆக்ராவுக்குக் கிளம்பினார் அரண்மனை வாசலிலேயே இரண்டு காவலர்கள் மறித்து என்ன ஏதென்று விசாரித்தனர்.
'மன்னரைச் சந்திக்கவேண்டும். அவர்தான் என்னை வரச் சொன்னார்.'
மகேஷ் தாஸின் எளிய தோற்றமும் கிழிந்த ஆடைகளும் காவலர்களைச் சந்தேகம் கொள்ளவைத்தன.
'மன்னர் உங்களை வரச் சொன்னாரா? அதற்கு என்ன சாட்சி?'
'இதோ.'..... அக்பர் அளித்த மோதிரத்தை எடுத்து, காவலர்களிடம் காட்டினார். காவலர்கள் அசந்து போனார்கள். எப்படியும் அக்பரைச் சந்திப்பார். பெரிய பெரிய பரிசுகளுடன் திரும்புவார் என்று நினைத்தனர்.
'சரி, உங்களை உள்ளே அனுமதிக்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. மன்னர் அளிக்கும் சன்மானத்தில் பாதியை எங்களுக்கு தந்துவிட வேண்டும். சம்மதமா?'
- 'சம்மதம்' என்று சொல்லிவிட்டு அக்பர் இருந்த அவையை அடைந்தார் மகேஷ் தாஸ்.
- அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அக்பர் அடையாளம் கண்டுகொண்டார்.
'உங்களைச் சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. உங்களுக்குப் பரிசு கொடுத்து வரவேற்புக் கொடுக்க விரும்புகிறேன். என்ன வேண்டுமோ கேளுங்கள்' என்றார்.
'எனக்கு நூறு சாட்டையடிகள் வேண்டும் ஷாயென்ஷா' என்றார் மகேஷ் தாஸ்.
அவையில் இருந்தவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. மகேஷ் தாஸ் இப்படி விஷமமாகச் சொல்கிறார் என்றால் உள்ளே வேறு ஏதோ விஷயம் இருக்கிறது என்று புரிந்துகொண்டார் அக்பர்.
'என்ன நடந்தது சொல்லுங்கள்' என்றார்.
மகேஷ் தாஸ் வாயில் காவலர்களுக்கு அளிக்க வேண்டிய பாதி சன்மானத்தைப் பற்றிச் சொன்னார். அந்தக் காவலர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தலா ஐம்பது சாட்டையடிகள் வழங்கப்பட்டன.
'நான் உங்களுக்குப் பொருளாக எதுவும் கொடுக்கப்போதில்லை. இனி நீங்கள் என்னுடன்தான் இருக்கவேண்டும் அரண்மனையிலேயே உங்களுக்கு வேலை கொடுத்திருக்கிறேன். இனி உங்களுடைய பெயர், பீர்பால்!'
தென்னாட்டில் தெனாலிராமன் போல வடநாட்டில் பீர்பால் அவர்கள் கூர்த்த மதி கொண்டவர் ஆர்த்தெழும் பிரச்சனைகளை எல்லாம் சாத்தும் சொற்களால் சரி செய்தவர்.
கூர்ந்த மதியும் நகைச்சுவை உணர்வும் கொண்ட மகேஷ் தாஸுக்கு 'பீர்பால்'என்று பெயர் சூட்டியவர் அக்பர். சிந்திக்கவும் சிரிக்கவும் செய்யும் பீர்பால் கதைகள் இன்று வரை மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன.