டெல்லி கார் குண்டு வெடிப்பு குறித்த புதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதில், செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் அருகே மெதுவாக ஊர்ந்து சென்ற கார், திடீரென வெடித்து சிதறிய காட்சிகள் பதிவாகியுள்ளன.
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் (10ஆம் தேதி) மாலை கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்த நிலையில், புதிய சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், செங்கோட்டை தெளிவாகத் தெரியும் நிலையில், கார் வெடித்து சிதறியது சிவப்பு பலூன் போன்று பதிவாகி உள்ளது.
திங்கட்கிழமை மாலை சரியாக 6.50 மணிக்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் சிசிடிவி காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கோட்டை கார் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் கூடுதல் டிஜிபி விஜய் சாக்கரே தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி கார் குண்டு வெடிப்பில் இறந்த மகனை, கையில் பச்சை குத்தி இருந்ததை வைத்து, தந்தை அடையாளம் கண்டிருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாந்தினி சவுக் அருகே பாகிரத் என்ற இடத்தில் மருந்தகம் வைத்திருந்த 34 வயதான அமர் கட்டாரியா திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு கடையைப் பூட்டி விட்டு வீட்டிற்கு கிளம்புவதாக தனது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். ஆனால், அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவரது தொலைபேசி எண்ணை குடும்பத்தினர் தொடர்பு கொண்ட போது, ஒரு பெண் எடுத்து பேசியதாகவும், குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை அவர் குறிப்பிட்டதாகவும் அமர் கட்டாரியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு, நிகழ்விடத்திற்கு சென்ற தந்தை, அமர் கட்டாரியாவின் கையில் பச்சை குத்தி இருந்ததை வைத்து உடலை அடையாளம் கண்டுள்ளார். தனது முதல் அன்பு அம்மாவிற்கு என்றும், அப்பா தான் தனது பலம் என்றும் கைகளில் பச்சை குத்தி இருந்த ஒரே மகனை இழந்து பெற்றோர் தவிக்கின்றனர்.
