Feed Item
·
Added a news

கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், கணவன் - மனைவி என சந்தேகிக்கப்படும் 70 வயதுடைய முதியவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வார்டன் மற்றும் செயின்ட் கிளேர் அவென்யூ சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ள 'புரோவிடென்ஸ் ஹெல்த்கேர்' மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் பிற்பகல் 12:30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கிக் காயங்களுடன் கிடந்த இருவரைக் கண்டறிந்தனர்.

அவர்களுக்கு உடனடியாக தீவிர முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிறிது நேரத்திலேயே இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இது மிகவும் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கக்கூடிய ஒரு சம்பவமாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் அல்லது இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தவர்கள், தேவையான மனநல ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், வெளியில் தேடப்படும் சந்தேக நபர்கள் எவரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 42