மிழ் சினிமா வரலாற்றில் குடும்ப உணர்வை மையமாக வைத்து உருவான படங்களில் முக்கியமான இடம் பெறுவது இயக்குனர் விசுவின் 'சம்சாரம் அது மின்சாரம்'. 1986-ல் வெளியான இந்தப் படம், ஆரம்பத்தில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில், பின்னர் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டுக்குடும்ப வாழ்வின் இனிமையையும், இன்னல்களையும் நகைச்சுவை கலந்து படம் பிடித்த விசு, தாமே நடித்தும் உயிர் கொடுத்தார். மனோரமா ஓர் வீட்டு பணியாளராக நடித்த காட்சிகள் இன்றும் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கின்றன.
குறிப்பாக, குழந்தையை விசுவின் காலடியில் வைக்கும் உணர்ச்சிமிகு காட்சி, சொற்களுக்கு அப்பாற்பட்ட நடிப்பின் உச்சமாக திகழ்கிறது. இசையமைப்பாளர்கள் சங்கர்–கணேஷ் இணையரும், பாடலாசிரியர் வைரமுத்துவும் இணைந்து உருவாக்கிய பாடல்கள், படத்திற்கு தனி அடையாளம் சேர்த்தன. பெற்றோரின் தியாகத்தை வலியுறுத்திய வரிகள் இன்றும் தலைமுறை தாண்டி பேசப்படுகின்றன. 'சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்' பிரிவில் தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
சம்சாரம் அது மின்சாரம் படத்தின் படப்பிடிப்பிற்காக கட்டப்பட்ட வீட்டில் சூட்டிங் செய்வதை நடிகர் ரஜினிகாந்த் மிகவும் விரும்பினாராம். மனிதர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் உணர்வு ரீதியாக தூரமாகி விடும் நவீன சூழலில், இந்தப் படம் சொல்லும் செய்தி இன்றும் பொருத்தமானதாகவே உள்ளது. இதில் மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இந்த படத்தின் ஹைலைட்டாக இடம்பெற்ற மனோரமா கேரக்டர், முதலில் படத்திலேயே இல்லையாம். கதையில் காமெடி கதாபாத்திரம் இருந்தால் அது படத்தின் கருவை பாதிக்கும் என எண்ணி அதை தவிர்த்தாராம் விசு.
பின்னாளில் ஏவிஎம் சரவணன் வற்புறுத்தி மனோரமா கதாபாத்திரத்தை படத்தில் வைக்க சொன்னாராம். அதன்பின்னரே விசு அந்த கேரக்டரை படத்திற்குள் கொண்டு வந்தாராம். இறுதியில் மனோரமாவின் கெரியரிலேயே சிறந்த கேரக்டராக அது அமைந்தது. அந்த கதாபாத்திரத்தில் கம்முனு கெட என சொல்லிக் கொண்டே மனோரமா பேசும் நீண்ட டயலாக் இன்றளவும் பேசப்படுகிறது. இந்தப் படம் அன்றைய தேதியில் வெறும் 15 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் இது தியேட்டர்களில் சக்கைப்போடு போட்டு பல மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தது. முன்னதாக உறவுக்கு கை கொடுப்போம் என்கிற பெயரில் இதே கதையை படமாக்கி இருந்தனர். 1975-ல் வெளிவந்த அப்படம் தோல்வியடைந்தது. பின்னர் அதே கதையை 1986-ல் சம்சாரம் அது மின்சாரம் என்கிற பெயரில் எடுத்து விசு வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.