இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், தமிழில் நேரடி படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ‘சீதாராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய பான் இந்தியா படங்களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், கடந்த ஆண்டு மும்பையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
அதற்கான விழாவில் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். தனுஷும் கலந்துகொண்டார். இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் வெளி யாயின. அது வதந்தி என்று தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மிருணாள் தாக்குரும் தனுஷும் பிப்.14-ல் திருமணம் செய்து கொள்வதாகச் செய்தி வெளியானது. இதற்கிடையே, நேர்காணல் ஒன்றில் பேசிய மிருணாள் தாக்குரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது.
அதற்கு, “எனக்கே தெரியாமல் என் திருமணம் பற்றிய செய்திகள் வருகின்றன. பிப். 14 அன்று எனக்குத் திருமணம் என்று நினைப்பவர்களுக்கு அது ‘ஏப்ரல் ஃபூல்’ ஜோக்காகத்தான் இருக்கும்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார் மிருணாள். தொடர்ந்து பேசிய அவர், “காதல் அழகான உணர்வு. அது அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அது உங்களை சிறந்த மனிதராக மாற்றும்” என்றார்.