விருதுநகரில் இருந்து மேற்கு வத்திராயிருப்பு செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் பின்னர் வலதுபுற கிளைச் சாலையில் மூன்று கிலோ மீட்டர்கள் சென்றால் அமைந்திருக்கிறது இந்த நேரக் கோவில்.
மாலையில் இருந்து நள்ளிரவு வரையிலும் திறந்திருக்கும் இந்த கோவில் அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று முழுஇரவும் திறக்கப்படுகிறது.
அன்றைய தினங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
மற்றபடி பகல் நேரத்தில் கோவில் திறப்பது இல்லை.
பெரிய அளவில் விசாலமான கோவில் மற்றும் கோபுரங்கள் ஒன்றும் இல்லாத நிலையில் எண் கோண வடிவில் ஒரு கருவறை.
அதன் உள்ளே சுமார் இரண்டு முதல் மூன்று அடியில் கால தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கூர்ந்து கவனித்தால் கால தேவி சிலையின் பின்புறம் 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் மற்றும் நவகிரகங்கள் உருவ வடிவில் அமைக்கப்பட்டு இருப்பது தெரியும்.
முதலில் கோவிலுக்கு வெளியில் இடமிருந்து வலமாக 11 சுற்றுகள் மற்றும் வலம் இருந்து இடமாக 11 சுற்றுகள் சுற்ற வேண்டும்.
பின்னர் உள்ளே சென்று கால தேவி சிலைக்கு எதிராக இருக்கும் ஸ்ரீ சக்கரத்தில் நின்று 11 வினாடிகள் நமக்கு வேண்டியதை நினைக்க வேண்டும்.
நாம் வேண்டியது கிடைக்கும் நினைத்தது நடக்கும் என்று நம்பிக்கை ஊட்டுகிறார்கள்.
சிறிய கோவில் என்றாலும் சுத்தமாக பராமரித்து கார் பார்க்கிங் உணவு மேடைகள் கழிப்பறை வசதிகள் இரவு தங்கும் வசதிக்காக அறைகள் என்று பார்த்து செய்திருக்கிறார்கள்.
கார் பைக் போன்ற தனியார் வாகனங்களில் வந்து செல்வோர் தவிர்த்து பொது வாகன வசதியை இங்கே எதிர்பார்க்க இயலாது.
அருகில் டீக்கடை உணவு விடுதிகள் போன்றவையும் இல்லை. அதனால் இங்கே சென்று தரிசனம் செய்து அருள் பெற விரும்புவோர் உணவு மற்றும் குடிநீரை கொண்டு செல்வது நல்லது.
கோவில் நன்றாக இருக்கிறது. தரிசனம் நன்றாக கிடைக்கிறது.மனமும் அமைதி அடைகிறது. ஒரு சிறு உறுத்தல் இருப்பதை தவிர்க்க இயலவில்லை.
கோவிலில் சுற்ற ஆரம்பிக்கும் சமயம் கண்டிப்பாக 50 ரூபாய் தரிசன கட்டணம் வாங்குகிறார்கள். கையில் ஒரு டேக் கட்டி விடுகிறார்கள். எட்டு பேர் மட்டுமே சுற்றி வந்தாலும் கட்டண தரிசனம் கண்டிப்பாக வசூலிப்பது உறுத்தல் எண் 1.
இந்த உலகில் வேற எந்த கடவுளும், எந்த சக்தியும், எந்த கோவிலும், எந்த சாமியும் செய்ய முடியாத ,தர முடியாத விஷயத்தை இந்த கோவிலில் இருக்கும் காலதேவி சிலை மட்டுமே செய்து தரும் என்ற அளவில் கல்வெட்டில் வடித்திருப்பது உறுத்தல் எண் இரண்டு.
மற்றபடி நிறைய மன கஷ்டம், பணக்கஷ்டம், பொருளாதாரம் திருமணம் குழந்தை பேறு ஆகியவை கேட்டு மனமுடைந்த நிலையில் இருப்பவர்கள் ஒரு முறை சென்று வந்தால் நல்ல விஷயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றுவரலாம். நம்பிக்கை தானே வாழ்க்கை!
இந்த கோவில் பற்றி ஏற்கனவே இன்னொரு சொந்தம் எழுதிய பதிவின் நகல் இங்கே!
*ஒருவருடைய கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் அதிசய கோவில் பற்றி தெரியுமா???
12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் அமைந்துள்ள *காலதேவி அம்மன் சிலை.
இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்!
ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது.
அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா?
அதுவும் நம்மூரில்!
அதுதான் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி எனும் கிராமத்தில் உள்ள காலதேவி கோவில். கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் *”நேரமே உலகம்”
புராணங்களில்வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர்.
இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. - காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.
நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட் டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது.
இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான்.
பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது.
கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும்.
கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை.
காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,“எனக்கு எது நல்லதோ அதைக் கொடு’ என வேண்டினால் போதும்.
மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, அல்லது ஆட்டோவிலோ செல்லமுடியும்.
தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு.
ஏன் என்றால் இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது. விழாக்காலத்தில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறது.
