அது பீமனுக்கும் ஜராசந்தனுக்கும் மல்யுத்தம் நடக்கும் நாள். கிருஷ்ணன் பீமனை ஆசீர்வதித்தார். ஜராசந்தனைப் போன்ற வலிமையான எதிரிக்கு எதிரான சரியான நகர்வுகள், தாக்குதல்கள் மற்றும் தற்காப்புகளைப் பற்றி பீமனுக்கு அறிவுறுத்தினார். ஜராசந்தர் தனது கிரீடத்தையும் அரச ஆடைகளையும் கலைந்து ஒரு மல்யுத்த வீரனின் உடையில் தயாரானார். அவர்கள் அனைவரும் மல்யுத்த அரங்கிற்குச் சென்றனர்.
இருவரும் முழு ஆர்வத்துடன் ஒருவருக்கொருவர் எதிராக நின்றனர். அவர்களின் தொடைகளிலும் முன்கைகளிலும் அவர்கள் அடித்த அடிகள் நகரம் முழுவதும் எதிரொலித்தன. அவர்கள் இருவரும் தங்களுக்குத் தெரிந்த ஒவ்வொரு திறமையையும் முயற்சித்து ஒருவரையொருவர் கீழே இழுத்தனர்.
இரு கைகளையும் சமமாக பொருத்தி, அவர்கள் கடுமையாக சண்டை செய்தனர். வெவ்வேறு பிடிகளை முயற்சித்தார்கள். அவர்களின் நெற்றிகள் மோதியபோது, தீப்பொறிகள் பறந்தன. அவர்கள் ஒருவரையொருவர் இடுப்பைப் பிடித்துக் கொண்டு தங்கள் காலால் தாக்க முயன்றனர். அடிகள் பயங்கரமானவையாக இருந்தது. இருவரிடமிருந்தும் வரும் ஒவ்வொரு அடியும் முழுமையாக வளர்ந்த யானையை வீழ்த்தும் வலிமையைக் கொண்டிருந்தன.
அவர்கள் ஒருவருக்கொருவரின் தலைகளை நசுக்க முயன்றனர். அவர்கள் இடைவிடாமல் சண்டையிட்டனர். சில நேரங்களில், பீமன் வலியால் துடிப்பார். சில சமயங்களில் ஜராசந்தரும். சத்தமாக ஒலித்த அறைகளும் அடிகளும் கர்ஜனைகளும் அனைத்து குடிமக்களையும் எச்சரித்தன. அவர்கள் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க விரைந்து கூடினர். அங்கே அவர்கள் அனைவரும், தங்கள் ராஜா அவருக்கு சமமான சக்திவாய்ந்த மனிதருடன் போரிடுவதைக் கண்டார்கள்.
இதற்கிடையில், இரு வீரர்களும் மற்றவரை சோர்வடையச் செய்து, அயர்வில் விழச் செய்தனர். பின்னர் ஒருவரை ஒருவர் சிக்க வைக்க முயன்றனர். சண்டை இரவும் பகலும் இடைவிடாமல் தொடர்ந்தது. ஆனால் இதுவரை, யாரும் ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இருவரும் அபார வலிமை கொண்டவர்கள். மேலும் எதிராளியின் வலிமையைச் சோதிப்பதில் கர்வம் கொண்டனர்.
இருவரும் வெற்றயை நோக்கி நகரும் முனைப்பில் சண்டை செய்தார்கள். தங்கள் போட்டியாளரின் அனைத்து பலவீனங்களையும் தேடினர். அதனால் யுத்தம் முழு பதின்மூன்று இரவு பகல்களாக தொடர்ந்தது. பதினான்காம் நாளில், இருவரில் மூத்தவரான ஜராசந்தர் சோர்வடைந்து பின்தங்கியதாகத் தோன்றினார். இப்போது அவர் அதிக அடிகளை பெற்றுக்கொண்டு, குறைவான அடிகளை கொடுத்துக் கொண்டிருந்தார்.
இதை உணர்ந்த கிருஷ்ணன், சோர்வடைந்த எதிரியை அதிகமாக அழுத்தக்கூடாது. அவர் உயிரைக்கூட இழக்க நேரிடும். நீங்கள் சக்தியை குறைத்து அவரோடு பொருந்தக்கூடிய வலிமையுடன் சண்டையிட வேண்டும். மல்யுத்தத்தின் விதி இதுதான் என்றார்.
ஜராசந்தரின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது என்பதை பீமன் புரிந்துகொண்டார்.
ஜராசந்தர் கூறினார், என்னை சாகும்வரை மல்யுத்தப் போட்டிக்கு சவால் விடத் துணிந்த இந்த கீழ்மகன் விட்டுவைக்கத் தகுதியற்றவன். இதை கேட்ட கிருஷ்ணன், பீமரே, உங்கள் தந்தை வாயுவிடமிருந்து நீங்கள் பெற்ற அற்புதமான வடிவத்தை வெளியே கொண்டு வாருங்கள். பீமன் ஜராசந்தரை அவன் தலைக்கு மேல் தூக்கி, காற்றில் நூறு முறை சுழற்றி, கீழே அடித்தான். பின்னர், ஜராசந்தரின் முதுகுத்தண்டில் தனது முழங்காலை அழுத்தி, அவர் உடலை இரண்டு துண்டுகளாக கிழித்து, இறுதியில் அவரைக் கொன்றான்.
(சில பதிப்புகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் சற்று வேறுபட்டவையாக உள்ளன. பீமன் ஜராசந்தனின் உடலை இரண்டு துண்டுகளாகக் கிழித்தபோது, அவை தானாகவே ஒன்று சேர்ந்தது. ஜராசந்தன் மீண்டும் உயிர் பெற்றான் என்று கூறுகின்றன. இறுதியாக, கிருஷ்ணர் பீமனின் கவனத்தை ஈர்த்து, ஒரு நீண்ட புல்லை எடுத்து, அதை செங்குத்தாக இரண்டு துண்டுகளாகக் கிழித்து, ஒவ்வொரு துண்டையும் எதிர் திசைகளில் எறிந்தார். பீமன் இந்த சமிக்ஞையைப் புரிந்துகொண்டு, அடுத்த முறை ஜராசந்தனை இரண்டு துண்டுகளாகக் கிழித்து, இரண்டு துண்டுகளையும் எதிர் திசைகளில் வீசினார். இது வலிமைமிக்க ஜராசந்தனின் மரணத்திற்கு வழிவகுத்தது என்றும் சில கதைகள் கூறுகின்றன.)