முடி உதிரக் காரணங்களாக அமைவது மாசு ,மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், சத்து குறைபாடு போன்றவை. பெண்களுக்கு இதனால் அதிக அளவில் முடி உதிரும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது கருஞ்சீரகம் .இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் முடி உதிர்வை போக்கி, வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடி வறட்சி,வெட்டு, அரிப்பு போன்ற பிரச்சினைகளையும் தீர்க்கிறது.
இந்த எண்ணெய்யை இரண்டு முறைகளில் தயாரித்து பயன்படுத்தலாம்.
முதல் முறை:
கருஞ்சீரகம் 100 கிராம் ,வெந்தயம் 100 கிராம், தேங்காய் எண்ணெய் 150 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். கருஞ்சீரகத்தையும் ,வெந்தயத்தையும் மிக்ஸியில் போட்டு பொடி ஆக்கி , அதனுடன் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி கலக்கவேண்டும்.
அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவேண்டும் .அந்த நீரில் தேங்காய் எண்ணெய் கலவை அடங்கிய சிறிய பாத்திரத்தை வைத்து சூடுபடுத்த வேண்டும். இந்த முறையில் எண்ணெய் தயாரிப்பதற்கு சற்று கூடுதல் நேரம் தேவைப்படும்.
பின்பு காய்ச்சிய எண்ணெய்யை ஆறவைத்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுத்து வேண்டும். .இதை தினமும் பயன்படுத்தலாம். இயலாதவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தலையில் நன்றாகத் தேய்த்து ,அரை மணிநேரம் ஊற வைத்து ,பிறகு மிருதுவான ஷாம்பு பயன்படுத்தி தலைக்குக் குளிக்கலாம்.
2- வது முறை:
கருஞ் சீரகம் ஒரு டீஸ்பூன், வெந்தயம் 2 டீஸ்பூன், கற்றாழை ஜெல் ஒரு கப், தேங்காய் எண்ணெய் ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றாழையின் தோலை நீக்கி நடுவில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் அதிலுள்ள அரிப்பு தன்மை நீங்கும்.
அடுப்பில் வாணலியை வைத்து, அதில் தேங்காய் எண்ணையையும் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். எண்ணெய் கொதிக்கும்போது கருஞ்சீரகம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான சூட்டில் அரை மணி நேரம் வரை காய்ச்ச வேண்டும். காய்ச்சிய எண்ணையை ஒரு பாட்டிலில் ஊற்றி 6 மாதம் வரை பயன் படுத்தலாம்.
இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தலையில் நன்றாக மசாஜ் செய்து குளிக்கும் போது, உடல் சூடு குறைந்து குளிர்ச்சி ஏற்படும். இந்த எண்ணையை ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம். தொடர்ந்து ஒரு மாதம் வரை பயன்படுத்தும் போது முடியின் வளர்ச்சி நன்றாகத் தூண்டப்பட்டு அடர்த்தியாக முடி வளரும்.