Feed Item
·
Added a news

தனது குழந்தைப் பராமரிப்பிற்காக வழங்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான டொலர்கள் தொகையை வழங்கத் தவறிய தந்தை ஒருவருக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகப் பிரசுரத் தடையின் கீழ் "திரு. M" (Mr. M) எனக் குறிப்பிடப்படும் அந்த நபர், நீதிமன்ற விசாரணையின் போது மொத்தமாக 37,312.54 டொலர்களை நிலுவையாக வைத்திருக்க வேண்டியிருந்தது.

குழந்தையின் தாயாரான "திருமதி. C" (Ms. C) மற்றும் பிரதிவாதியான திரு. M ஆகிய இருவரும் சட்டப்பூர்வமாக திருமண பந்தத்தில் இணையவில்லை. குழந்தை பிறந்த நாள் முதல் வளர்ப்புச் செலவுகள் முழுவதையும் தாயாரே கவனித்து வந்துள்ளார்.

ஆண்டிற்கு 297,700 டொலர்கள் வருமானம் ஈட்டும் திரு. M, குழந்தைப் பராமரிப்பிற்காக மாதம் 2,500 டொலர்களையும், நிலுவைத் தொகையாக 16,429 டொலர்களையும் வழங்குவதாகச் சட்டப்பூர்வ ஒப்பந்தம் செய்தார்.

நிலுவைத் தொகை 50,000 டொலர்களை நெருங்கியதையடுத்து, மாதம் 7,500 டொலர்கள் செலுத்த வேண்டும் எனவும், தவறினால் ஒவ்வொரு தவறும் தவறும்போதும் 3 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அவர் இருமுறை மட்டுமே பணத்தை வழங்கிவிட்டு, அதன் பின்னர் பணத்தைச் செலுத்த தவறியுள்ளார்.

இதனால் தனக்குக் கடும் கடன்பாடும், வாழ்க்கைத் தரத்தில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக தாயார் நீதிமன்றத்தில் விவரித்தார். தனக்கு போதிய வருமானம் இல்லை எனவும், நிதி நெருக்கடி நிலவுவதாகவும் தந்தை சார்பில் வாதிடப்பட்டது. மேலும், தனது நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 52,000 டொலர்களை தன்னால் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.

ஆனால், அந்த வங்கிக் கணக்கிலிருந்து 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏராளமான ஆடம்பரச் செலவுகள் செய்யப்பட்டுள்ளதை நீதிபதி மைக்கா ரான்கின் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • 21