வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில், கண்ணும் கண்ணும் கலந்து என்கிற மிகவும் பிரபலமான ஒரு போட்டி நடனம் வரும்.
ஹீராலால் என்ற டான்ஸ் மாஸ்டர் இரு நாட்டிய தாரகைகளுக்கும் நடன அசைவுகள் சொல்லித்தந்தார்.
படத்தின் தயாரிப்பாளர் வாசனிடம் ஒரு கொள்கை இருந்தது. அவரிடம் வேலை செய்தவர்கள் எல்லாம் எழுபது வயதைத் தாண்டி இருக்கவேண்டும். மேக்கப், லைட்போய், காமிராக்காரர், வசனகர்த்தா இப்படி எல்லாரும் வாசனுடைய வயதுக்காரர்களாக இருந்தார்கள். ஒரு லைட்டை தள்ளி வைப்பது என்றால்கூட அரைமணி நேரம் எடுக்கும், அதனால் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நகர்ந்தது.
பத்மினிக்கு மற்றப் படப்பிடிப்புகள் இருந்தன. வைஜயந்தி மாலா வடக்கில் இருந்து இதற்காகவே வந்திருந்தார். பத்மினி இல்லாத சமயங்களில் வைஜயந்தி மாலா ஹீராலாலிடம் ரகஸ்யமாக சில நடன அசைவுகளை ஒத்திகை பார்த்து வைத்துக்கொள்வார்.
படப்பிடிப்பு சமயம் பத்மினியின் நடனம் அமோகமாக அமைந்தது. வைஜயந்தி மாலா புளகாங்கிதம் அடையவில்லை. அவர் ‘சாதுர்யம் பேசாதேடி, என் சலங்கைக்கு பதில் சொல்லடி’ என்று தோளிலே சடைதுவழ, காலிலே தீப்பொறி பறக்க, புயல்போல சுழன்றபடி மேடையிலே தோன்றுவார்.
ஒருமுறை இருவரும் ஆடும்போது பத்மினியின் நிழல் வைஜயந்தி மாலாவின்மேல் விழுந்தது. பத்மினி மன்னிப்பாக நடனத்தை நிறுத்தி ‘என்னுடைய நிழல் உங்கள் மேலே விழுகிறது’ என்றார். உடனேயே வைஜயந்தி மாலா ஆங்கிலத்தில் இரண்டு அர்த்தம் தொனிக்க ‘It’s only a passing shadow’ என்றார்.
தமிழ் நாட்டின் முதல் நடிகையை பார்த்து ‘நகரும் நிழல்’ என்று சொன்னது பத்மினியைப் புண்படுத்தி விட்டது. அந்த இரண்டு வார்த்தைகளுக்காக தான் இரண்டு இரவுகள் தொடர்ந்து அழுததாக பத்மினி கூறினார்.
படம் வெளிவந்த போது நாட்டிய தாரகை யார் என்பதில் ஒருவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.