‘வா வாத்தியார்’ பட விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 3 கோடியே 75 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், மீதமுள்ள கடன் தொகையை செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு வெளியிடலாம் என அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் பெற்ற 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், அர்ஜுன்லால் சொத்துகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட சொத்தாட்சியர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பணத்தை திரும்ப செலுத்தும் வரை ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிடகூடாது என தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டுடியோ கிரீன் தரப்பில், 3 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கான டிடி-யை, பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் செலுத்தியது.
இதையடுத்து மீதி தொகையையும் செலுத்தினால் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், மூன்று கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பித் தராததால் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தனேஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, படத்துக்கு தடை விதிக்க மறுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
