Feed Item
·
Added a post

ஒடிசா மாநிலம், மால்கான்கிரி மாவட்டம், தமாசா கிராமத்தில் வசித்து வருபவர், விவசாயி தேபா போடியாமி. மா விவசாயத்தில் மிகுந்த ஆர்வமும் அனுபவமும் பெற்ற இவர், தன்னுடைய தோட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியாசாகி மாமரக் கன்றுகளை நடவு செய்துள்ளார். அவை நன்கு வளர்ந்து தற்போது மகசூல் கொடுக்கத் தொடங்கியுள்ளன.

சர்வதேசச் சந்தை நிலவரப் படி, ஒரு கிலோ மியாசாகி மாம்பழத்தை மொத்த விற்பனையில் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார், தேபா போடியாமி. சில்லறை வணிகத்தில் ஒரு கிலோ மாம்பழத்தை இரண்டரை லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்கிறார்.

மிகவும் விலை உயர்ந்த மாம்பழம் என்பதால் தோட்டத்தைச் சுற்றி திருடர்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், தானும் தன் குடும்பத் தினரும் 24 மணி நேரமும் தோட்டத்திலேயே தங்கியிருந்து காவல் காத்து வருவதாகவும் விவசாயி தேபா போடியாமி கூறுகிறார்.

``ஜப்பானைச் சேர்ந்த மியாசாகி மாமரங்கள் இந்திய மண்ணில் வெற்றிகரமாக வளர்ந்து மகசூல் கொடுப்பதென்பது மிகவும் சிரமம். சோதனை முயற்சியாகவே, இதை நடவு செய்து கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தேன். ஆனால், ஆச்சர்யப்படும் வகையில் சிறப்பாக விளைந்து மகசூல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. தற்போது என்னுடைய தோட்டத்தில் 17 மியாசாகி மாமரங்கள் உள்ளன. அனைத்து மரங்களிலுமே பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. ஒரு மாம் பழம் சராசரியாக 350 கிராம் எடை உள்ளது. மரங்களிலிருந்து மாம்பழங்கள் கீழே விழுந்து சேதமடைந்து விடக்கூடாது என்பதற்காக மரக் கிளைகளில் வலைகளைக் கட்டி வைத்திருக்கிறேன். பெரும் செல்வந்தர்கள் பலர், முன்பதிவு செய்து இந்த மாம்பழங்களை வாங்கிச் செல்கிறார்கள்’’ என்கிறார், தேபா போடியாமி.

  • 36