Feed Item
·
Added a post

பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் ஒரு கதை.

மதுரை நகரில் பாணபத்திரன் என்ற இசைப் புலவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அரசாங்கத்தில் உத்தியோகம். அவன் சிவபக்தன். மதுரையில் சோமசுந்தரக் கடவுள் சந்நிதானத்தில் இசை இசைத்துத் தொண்டு செய்வதிலேயே நாட்டம் உடையவனாக இருந்தான். ஒருநாள் வடநாட்டிலிருந்து ஏமநாதன் என்ற வீணை வித்துவான் ஒருவன் மதுரைக்கு வந்தான். அரசனிடம் தன் பெருமையைச் சொல்லிக் கொண்டதோடு, தன்னை யாழ் வாசிப்பதில் தோல்வியுறச் செய்பவர் யார் இந்த நாட்டில் இருக்கிறார் எனவும் செருக்கோடு கூறினான். அரசன் தன் ஆஸ்தானத்தில் உள்ள பாணபத்திரனுக்கு அவனோடு வாசிக்க வேண்டுமென்று கட்டளையிட்டான். பாணபத்திரனுக்கு இந்த இசைவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சோமசுந்தரக் கடவுளின் சந்நிதானத்துக்குச் சென்று, "இறைவனே, ஏமநாதனை நான் யாழ் வாசிப்பதில் தோல்வியுறச் செய்ய முடியுமென்று தோன்றவில்லையே! அவனை வெல்ல வேண்டுமென்ற ஆசை எனக்கு இல்லை. அவனிடம் நான் தோற்றுப்போய் விட்டேன் என்றால் அரசன் என்னை வேலையை விட்டுத் தள்ளிவிடுவானே! ஊரை விட்டுப் போக வேண்டி நேர்ந்தாலும் நேருமே! அப்புறம் உன் சந்நிதானத்திற்கு நான் எப்படி வர முடியும்? உனக்குத் திருத்தொண்டு எப்படிச்செய்ய முடியும்?" என்று கண்ணீர் விட்டுக் கதறினான்.

அன்று மாலை நல்ல மழை வந்துவிட்டது. இறைவன் ஒரு கிழ விறகுவெட்டிக் கோலத்தை எடுத்துக் கொண்டு தன் தலையில் ஒரு விறகுக் கட்டும் அதில் செருகப்பட்டிருக்கும் ஒரு பழைய யாழும் கொண்டு தெருவோடு வந்தான். மழைக்கு ஒதுங்குகிறவனைப் போல, ஏமநாதன் தங்கியிருந்த வீட்டின் வாசலுக்குச் சென்று உட்கார்ந்து கொண்டு, யாழை எடுத்து மெல்ல வாசிக்க ஆரம்பித்தான். அந்த இனிய நாதம் ஏமநாதன் செவியில் பட்டது. யார் பாடுகிறார் என்று பார்த்தான். பார்த்தால் அவனுக்கே நம்பிக்கை இல்லை. ஒரு கிழ விறகுவெட்டி; விறகுக் கட்டும் அவன் அருகில் இருக்கிறது; விறகு போலவே ஒரு யாழ். அந்த யாழிலிருந்தா அவன் இத்தகைய இனிமையான இசையை எழுப்புகிறான்! எழுந்திருந்து அவனிடம் சென்றான். "அப்பா, நீ யார்? இந்த இனிமையான சங்கீதத்தை யாரிடம் கற்றுக் கொண்டாய்?" எனக் கேட்டான்.

'அதை ஏன் கேட்கிறீர்? என் தலைவிதி இப்படி இருக்கும்படி ஆகிவிட்டது! நான் பாடுவது என்ன, அவ்வளவு உயர்ந்ததா? என் குருநாதரிடம் இருக்கிற மற்ற மாணாக்கர்கள் வாசிப்பதைக் கேட்டால் அப்புறம் நீர் என்ன சொல்வீரோ எனக்குத் தெரியாது; நானும் யாழ் கற்றுக் கொள்ள வேண்டுமென்றுதான் குருநாதரிடம் சென்றேன். அவர் எனக்கு மிகவும் சிரமப்பட்டே சொல்லிக் கொடுத்தார். கடைசியில் என் தலை நரையோடிக் கிழவன் ஆகிவிட்டேன். 'போ, இனி உனக்கு வீணை வரவே வராது' என்று சொல்லி என் ஆசிரியர் என்னைத் துரத்திவிட்டார். எனக்கு வேறு வழி இல்லாமல் விறகு வெட்டிப் பிழைக்க ஆரம்பித்தேன்' என்றான். 'வீணையே வராது எனச் சொல்லி கழித்து விடப்பட்ட இவனே இவ்வளவு நன்றாக வாசிப்பான் என்றால், இவன் குருநாதர் எப்படி வாசிப்பாரோ?' என்று வியந்த ஏமநாதன், "உன் குருநாதர் யார் அப்பா?” என்றான்.

"அவரை உமக்குத் தெரியாதா? அவர்தான் பாணபத்திரர்; பாண்டியன் அவைக்களத்துப் பாணர்" எனச் சொல்லக் கேட்டான் ஏமநாதன். அவ்வளவுதான். அன்றைக்கே இரவோடு இரவாக அந்த ஊரை விட்டே ஒடிப் போய்விட்டான். பாணபத்திரனது பெருமையை இறைவன் நேர்முகமாகச் சொல்லவில்லை. "அவனால் கழித்து விடப்பட்டவன் நான்" என்று சொன்னான். 'நானே இவ்வளவு நன்றாக வாசிக்கிறேன் என்று நீர் சொன்னீரானால், என் குருநாதர் எப்படி வாசிப்பார் என்பதை நீரே ஊகித்துக் கொள்ளலாம்' எனச் சொல்வதுபோலச் சொன்னார்.

  • 129