சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதா, இல்லையா என்பதை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. இதனிடையே இப்படம் ஜனவரி 23-ம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்படத்தின் ஓடிடி உரிமை இன்னும் கையெழுத்தாகவில்லை. இதனால் வெளியீட்டு தேதியினை முடிவு செய்ய முடியாமல் இருக்கிறது படக்குழு.
ஜனவரி 23-ம் தேதி வெளியீடு என்றால் இப்போதே விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் இப்படத்தின் வெளியீடு ஜனவரியில் இருக்காது என்பது தெளிவாகிறது. மார்ச் 19-ம் தேதி வெளியிடலாம் என்ற முடிவுக்கு படக்குழு வந்திருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிந்து படமும் தயாராகி விடும்.
‘கருப்பு’ விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்க இருப்பதால், வெங்கி அட்லுரி படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்காமல் இருக்கிறது. ஆனால், ‘கருப்பு’ மார்ச் மாத வெளியீடு என்பதால், அதற்கு முன்னதாகவே வெங்கி அட்லுரி படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கிவிடும் என தெரிகிறது. ஏனென்றால் இப்படம் மே மாதத்தில் வெளியிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை, ஓடிடி, தொலைக்காட்சி என அனைத்து உரிமைகளும் விற்பனையாகிவிட்டது.