Feed Item
·
Added a news

ஏர் கனடா விமான விபத்து தொடர்பில், விமான நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்ட இரங்கல் செய்தி கனடாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மார்ச் மாதம் 22ஆம் திகதி, கனடாவின் மொன்றியலிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள LaGuardia விமான நிலையத்தில் சென்று இறங்கிய ஏர் கனடா விமானம் ஒன்று, தீயணைக்கும் ட்ரக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விமான ஓடுபாதையின் குறுக்கே வேகமாக வந்த தீயணைப்பு வாகனம் ஒன்றின் மீது மோதி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தின் விமானிகள் இருவரும் உயிரிழந்தார்கள்.

விமான விபத்தைத் தொடர்ந்து, ஏர் கனடா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கேல் (Michael Rousseau) சமூக ஊடகமான எக்ஸில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஏர் கனடா விமான விபத்தில் இரண்டு உயிர்கள் பலியானதால் தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்த மைக்கேல், அந்த விபத்து, ஏர் கனடாவுக்கு ஒரு கருப்பு தினம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், மைக்கேலின் செய்தி பெரிய அளவில் கனடாவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. காரணம், தான் வெளியிட்டிருந்த வீடியோவில் மைக்கேல் ஆங்கிலத்தில் பேசியிருந்தார்.

விடயம் என்னவென்றால், கனடாவின் அலுவல் மொழிகள் ஆங்கிலம் மற்றும் ஃப்ரெஞ்சு ஆகும். அத்துடன், விமான விபத்தில் உயிரிழந்த விமானிகளில் ஒருவரான ஆண்டோயின் ஃபாரஸ்ட் ஃப்ரெஞ்சு மொழி பேசுபவர். ஆக, மைக்கேல் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அவர் ஆங்கிலம், ஃப்ரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளிலும் பேசியிருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, கனடா பிரதமரான மார்க் கார்னியே, தான் மைக்கேலின் செய்தியால் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்துள்ள விடயம் பெரிதும் கவனம் ஈர்த்துவருகிறது.

ஏர் கனடா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியின் ஒற்றை மொழி இரங்கல் செய்தியில் இரக்கமில்லை என்றும், முன்பின் யோசிக்காமல் அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கார்னி விமர்சனம் முன்வைத்துள்ளார்.

நாம் இருமொழி பேசும் நாட்டில் வாழ்கிறோம் என்பதில் பெருமையுடையவர்கள், அப்படியிருக்கும்போது, எப்படிப்பட்ட சூழலானாலும், இரு அலுவலக மொழிகளிலும் தகவல் தொடர்பு மேற்கொள்வது ஏர் கனடா போன்ற நிறுவனங்களின் கடமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமருடன், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏர் கனடா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கேலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

  • 29