Feed Item
·
Added article

"வசதியான குடும்பத்துல பிறந்தவ தான் நான். என்னோட சேர்த்து வீட்ல நாலு பொண் ணுங்க. எல்லாரும் நல்லா படிச்சவங்க. நான் மட்டும்தான் படிக்கல. சின்ன வயசிலேயே டிராமால நடிக்க ஆரம்பிச்சுட்டேன். திருச்சியில டிராமா போட ஆரம்பிச்சா, அப்படியே மதுரை, கோயம்புத்தூர்னு சுத்திட்டு சென்னைக்கு வந்து சேர்வோம். மூணு ஷோ நடிச்சா, பத்து ரூபா சம்பளம். அப்போ ஒரு சவரன் பவுனே 50 ரூபாதான். அதனால இந்த பத்து ரூபாய் சம்பளம் பெரிசா தெரியும். நாடகங்களில் நடிச்சுக்கிட்டிருக்கும்போது ஒரு சாக்லெட் விளம்பரத்துல நடிச்சேன். அந்த விளம்பரத்தைப் பார்த்துதான் எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது.

முதல் படத்துலயே ஜெமினி, சாவித்திரி, எம்.ஆர்.ராதா, முத்துராமன்னு பெரிய பெரிய நடிகர்களோட நடிக்கிற வாய்ப்பு. எம்.ஜி.ஆர், சிவாஜின்னு ஜாம்பவான்களோடவும் நடிச்சிட்டேன். ரசிகர்களிடமிருந்து பட்டத்தையும், பாராட்டையும் வாங்கியிருக்கேன். நினைச்சிப் பார்த்தா சந்தோஷமாதான் இருக்கு. அதே சமயம் நான் பெருசா சாதிச்சிட்டதாவும் நினைக்கல. இந்த உலகத்தில உள்ள அத்தனை பேருமே கற்றது கை மண் அளவுதான்!’’ - தத்துவமும் பழுத்த அனுபவத்தின் பக்குவமும், கே.ஆர்.விஜயாவின் பேச்சில் மணக்கிறது.

‘‘இன்னிக்கு ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆயிட்டா, அதுக்கப்புறம் அம்மா, அக்கா கேரக்டர்கள்லதான் நடிக்க முடியும்னு சொல்றாங்க! ஆனா, என்னோட முதல் படம் ‘கற்பகம்’ ரிலீஸான ரெண்டே வருஷங்கள்ல எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அதுக்கு அப்புறம் நான் ஹீரோயினா மட்டும் 300 படங்கள்ல நடிச்சேன். கதாபாத்திரம் அர்த்தமுள்ளதா இருந்தா மட்டும்தான் யாரா இருந்தாலும் நிற்க முடியும்... நீடிக்க முடியும்.

எனக்கு ‘கற்பகம்’, ‘இதயக் கமலம்’, ‘தீர்க்க சுமங்கலி’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரி சூலம்’னு நிறைய படங்கள் அப்படி அமைஞ்சுது. ‘உங்கள மாதிரி ஒரு மருமகள் வேணும்’... ‘உங்கள மாதிரி மாமியார் அமையணும்’... ‘உங்கள மாதிரி அம்மா வேணும்’னு ஒவ்வொரு காலகட்டத்துலயும் ரசிகர்கள் என்கிட்ட பேசறதைக் கேட்கிற பாக்கியம் அமைஞ்சது. இதுதாங்க ஒரு நடிகைக்கு வேணும். ரசிகர்கள் தன் வீட்டுப் பொண்ணா நம்மளைப் பார்க்கணும். அப்படிப் பார்த்துட்டா எல்லா வயசுலயும் ஹீரோயினா நடிக்கலாம்.

- கே.ஆர். விஜயா

  • 52