டொரண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல மணிநேரம் நீடித்த உறைபனி மழையைத் தொடர்ந்து, பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்படும் என கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில பகுதிகளில் ஒரு மணித்தியாலத்திற்கு 2 முதல் 5 சென்டிமீட்டர் வரை பனி பொழியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வீதித் தோற்றப்பாடு வெகுவாகக் குறையக்கூடும். வீதிகள் மற்றும் நடைபாதைகள் பனியினால் மூடப்பட்டிருப்பதால், வாகனங்களைச் செலுத்தும் போது விளக்குகளை ஒளிரச் செய்யுமாறும், வேகத்தைக் குறைத்து பாதுகாப்பான இடைவெளியைப் பேணுமாறும் ஒன்டாரியோ மாகாண காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக யோர்க் மற்றும் ஹால்டன் பிராந்தியங்களில் பாடசாலை பேருந்து சேவைகள் மற்றும் ஏனைய போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனினும் பாடசாலைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வோன் மற்றும் மார்க்கம் போன்ற நகரங்களில் வீதிகளில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதேசமயம் பனி மற்றும் ஐஸ் படிவுகள் காரணமாக வீதிகளைச் சுத்தம் செய்ய சாதாரண நேரத்தை விட அதிக காலம் எடுக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரால் பாதிக்கப்படுபவர்களுக்காக டொரோண்டோ மாநகர சபையினால் 5 வெப்பமூட்டும் மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.