Feed Item
·
Added article

ஒரு நாள் நள்ளிரவு எம்.எஸ்.விஸ்வநாதன் வீட்டு டெலிபோன் மணி அடிக்கிறது. எதிரே பேசிய குரல் "அண்ணா... கண்ணதாசன் நம்மளையெல்லாம் தவிக்க விட்டுட்டு போயிட்டாருண்ணா" என்கிறது. "அய்யோ என் தெய்வமே..." என்று கதறியபடி தலையிலும், முகத்திலும் அடித்தபடியே காரில் கண்ணதாசன் வீட்டுக்கு செல்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன். அழுது வடிந்த கண்ணீருடன் அவிழ்ந்த வேட்டியை பிடித்துக் கொண்டு அவர் வந்த காட்சியை வீட்டு ஹாலின் ஷோபாவில் அமர்ந்தபடி ரசித்துக் கொண்டிருந்தார் கண்ணதாசன்.

ஓடிப்போய் அவரை கட்டிப்பிடித்து அழுது மாறி மாறி முத்தமிட்டு "எவனோ ஒருத்தன் நீ..." என்றபடி மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தார். "விஸ்வநாதா பதறாத. நான் தான் அப்படி போன் பண்ணச் சொன்னேன். நான் செத்துப்போயிட்டா நீ எப்படி அழுவேன்னு பார்க்கணும்போல இருந்திச்சு. அதான் அப்படிச் செய்ததேன்" என்றாராம்.

கோபத்துடன் எழுந்து செல்ல இருந்த விஸ்வநாதனை பிடித்து இழுத்து உட்கார வைத்த கண்ணதாசன். "விச்சு கோவிச்சுக்காத நான் செத்தா நீ தான் என் இறுதி சடங்கை நடத்தணும்" என்றாராம். குழந்தை மனசு கொண்ட விஸ்வநாதன் மீண்டும் அழத் தொடங்கிவிட்டார். பின்னாளில் கண்ணதாசன் மறைந்தபோது அவரது இறுதி சடங்கை முன்னின்று நடத்தினார் விஸ்வநாதன்.

"கண்ணதாசன் எனக்கு கிடைத்திருக்காவிட்டால் நான் ஆர்மோனிய பெட்டியை தூக்கிக் கொண்டு கேரளாவுக்கு பாட்டு வாத்தியாராக போயிருப்பேன்" என்பார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

"அடுத்த பிறவியில் நானும், விஸ்வநாதனும் ஒரு தாய் வயிற்றில் பிறக்க வேண்டும்" என்பார் கண்ணதாசன். இருவருக்கும் அப்படி ஒரு நட்பு இருந்தது.

ஒரு சிறிய நிகழ்வு...

நான் "பட்டத்து ராணி பார்க்கும் பார்வையில்" எகிப்திய இசையை கேட்டேன். "தென்றல் வந்து வீசாதோ" பாடலில் தென்பாண்டி மண்டலத்தின் மண்வாசனையை கண்டேன். "அபூர்வ ராகத்தில்" நளினமான கர்நாடக சங்கீதத்தை அனுபவித்தேன். "முத்தமிடும் நேரம் எப்போ"வில் மெக்ஸிகன் இசையை கேட்டேன். உலகத்தில் உள்ள அனைத்து இசையும் அறிந்தவர் எம்எஸ் விஸ்வநாதன் என்று கண்ணதாசன் பெருமையாக கூறியிருந்தார்.

எம்எஸ் விஸ்வநாதன் பயன்படுத்தாத இசைக் கருவி இல்லை, இசையை தவமாக நினைத்து பணியாற்றியவர். கர்நாடக இசை, மேற்கத்திய இசை, நாட்டுப்புற இசை, வட்டார வழக்கு என அத்தனை பரிமாணங்களிலும் முத்திரையை தனித்தன்மையுடன் பதித்து வெற்றி கண்டவர்.

கண்ணதாசனுக்கும், எம்.எஸ்.விக்கும் கடுமையான கருத்து வேறுபாடுகள் வரும். எல்லாம் பாடலுக்கானதாக இருக்கும். பல மாதங்கள் வரை இருவரும் பேசாமல் இருந்திருக்கிறார்கள். இருவரையும் இறுதியில் சேர்த்து வைத்துவிடுவார் எம்.ஜி.ஆர்.

"தெய்வத்தாய்" திரைப்படத்தில் வரும் "ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்" என்ற பாடலில் ஆப்பிரிக்கன் இசைக் கருவியான 'பாங்கோஸ்" எனும் இசைக்கருவியைக் கொண்டே பாடலை ஆரம்பித்திருக்கும் அழகே அலாதி. அதே போல் "புதிய பறவை" திரைப்படத்தில் வரும் "பார்த்த ஞாபகம் இல்லையோ", "பணத்தோட்டம்" திரைப்படத்தில் வரும் "பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா" என்று பல பாடல்களை உதாரணமாக சொல்லிக் கொண்டே போகலாம்.

இருவருமே தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டு காலம் இசை ஆட்சி செய்தவர்கள். இருவருமே தங்கள் காலத்தில் பணத்தை பெரிய விஷயமாக கருதவில்லை. பாடல், சுயமரியாதை, புகழ் இதுவே போதும் என்றிருந்தார்கள். இருவரின் உழைப்புக்குரிய அங்கீகாரத்தை திரையுலகமும் சரி, வெளியுலகமும் சரி தரவே இல்லை. இன்று காமெடியன்கள் வாங்கும் தேசிய விருதுகூட எம்.எஸ்.விக்கு கிடைக்கவில்லை.

  • 124