Feed Item
·
Added a post

அப்போது குமரன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். பள்ளி விடுமுறை என்பதால் தாத்தா வீட்டுக்குச் சென்றிருந்தான். விடுமுறையைத் தாத்தாவுடன் கழிப்பது அவனுக்குப் பிடிக்கும்.

குமரனின் குடும்பம் வசதியான குடும்பம் அல்ல. அதுபோலவே அவனுடைய தாத்தாவுக்கும் பெரிய வீடோ, சொத்தோ, சேமிப்போ எதுவும் கிடையாது. தினமும் உழைத்தால்தான் அன்றைய உணவு என்ற வாழ்க்கை.

தாத்தாவின் தொழில் கமர்கட்டு மிட்டாய் செய்வது.

தினமும் வெல்லத்தை வாங்கி வந்து பாகாகக் காய்ச்சுவார். பாகு சரியான பதத்திற்கு வந்ததும், வீட்டுச் சுவரில் அடித்திருந்த ஆணியில் அதை மாட்டி, கம்பி பதம் வரும் வரை நன்றாக இழுப்பார். பின்னர் அதைச் சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து, பொட்டுக்கடலை மாவுடன் சேர்த்து கமர்கட்டு மிட்டாய்களாகச் செய்வார்.

அவற்றைச் சிறிய பொட்டலங்களில் அடைத்து, ஊரில் உள்ள கடைகளுக்குக் கொண்டு சென்று விற்பார்.

ஒரு ரூபாய்க்கு இருபது பைசா லாபம்.

அந்தச் சொற்ப லாபத்தில்தான் அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள் என்று வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கி, குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

ஒருநாள், தாத்தா வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருந்த ஒரு வீட்டில் திருமணம் நடைபெற்றது. திருமண அழைப்பிதழைத் தாத்தாவிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

திருமணத்திற்குத் தாத்தா மட்டும் செல்லத் தயாரானார்.

“தாத்தா... நாமெல்லாம் போகலாமே?” என்று குமரன் கேட்டான்.

“வேண்டாம் குமரா. நான் மட்டும் போயிட்டு வருகிறேன்.”

குமரனுக்குப் புரியவில்லை.

“ஏன் தாத்தா? நாமெல்லாம் போனால் என்ன?”

தாத்தா சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு,

“நான் மட்டும் போயிட்டு வருகிறேன். நீ வீட்டிலேயே இரு,” என்றார்.

தாத்தா திருமணத்திற்குச் சென்று மொய் செய்துவிட்டு, அங்கே உணவருந்திவிட்டு வீடு திரும்பினார்.

அன்று குமரனின் மனத்தில் ஒரே வருத்தம்.

‘நாமெல்லாம் ஏன் திருமணத்திற்குப் போகக்கூடாது?’

திருமண வீட்டில் இட்லி, வடை என்று நல்ல சாப்பாடு இருக்கும். ஆனால் தாத்தா வீட்டில் கிடைப்பதோ பெரும்பாலும் முந்தைய நாள் மிச்சமான பழைய சோறு.

அந்த வயதில் குமரனுக்கு அதுதான் பெரிய கவலையாக இருந்தது.

தாத்தா அவனருகில் வந்து அமர்ந்தார்.

“குமரா...”

“என்ன தாத்தா?”

“நாம் மிகவும் வசதி குறைந்தவர்கள். நம்ம தெருவில் திருமணம் நடக்கிறதால்தான் நம்மையும் அழைக்கிறார்கள். அதற்காக குடும்பத்தோடு எல்லாரும் போய்விடக் கூடாது.”

குமரன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“எல்லாரும் குடும்பத்தோடு போனால், ‘இவர்கள் சாப்பிடுவதற்காகத்தான் வந்திருக்கிறார்கள்’ என்று சிலர் நினைப்பார்கள். நம்முடைய ஏழ்மையைப் பார்த்து பரிகாசம் செய்வார்கள். அதனால்தான் இதுபோன்ற இடங்களுக்கு வீட்டில் இருந்து ஒருவர் மட்டும் போய் மொய் செய்துவிட்டு வர வேண்டும். அப்படிச் சென்றால் அவர்கள் பார்வையில் நமக்கான மரியாதை கொஞ்சமாவது இருக்கும்.”

குமரனுக்கு தாத்தா சொன்னது பாதி புரிந்தது. பாதி புரியவில்லை.

அந்த வயதில் பசியைப் புரிந்துகொள்ள முடிந்தது; வறுமையின் அவமானத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

சாப்பிடும் நேரங்களிலும் தாத்தா அவனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பார்.

“குமரா, சாப்பிடும்போது முதலில் எல்லோருக்கும் உணவு இருக்கிறதா என்று பார்த்துக்கொள். நமக்குப் போட்டுவிட்டார்கள் என்பதற்காக நாம் மட்டும் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டால், பின்னால் சாப்பிட வருபவர்களுக்குப் போதாமல் போய்விடலாம். நம்மைப் போலவே மற்றவர்களுக்கும் பசி இருக்கும்.”

அந்த வார்த்தைகளையும் குமரன் கேட்டுக் கொண்டான்.

விடுமுறை முடிந்தது.

பள்ளிக்குச் செல்ல வேண்டிய நாள் வந்தது.

புதிய சட்டை, கால்சட்டை, பள்ளிக்குத் தேவையான பொருட்கள் என்று தன்னால் முடிந்தவற்றையெல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு, குமரனை அவன் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றார் தாத்தா.

சில நாட்கள் கழிந்தன.

ஒருநாள் குமரனின் வீட்டிற்கும் ஒரு திருமண அழைப்பிதழ் வந்தது.

இந்த முறை குமரனும் அவனுடைய அம்மாவும் திருமணத்திற்குச் சென்றார்கள்.

திருமண வீடு களைகட்டியிருந்தது.

திருமண வீட்டில் விருந்து தொடங்கிவிட்டது.

வாசலில் நின்றபடியே பந்தியைப் பார்த்த குமரனின் கண்கள் விரிந்தன. வாழை இலைகள் வரிசையாக விரிக்கப்பட்டிருந்தன. பெரியவர்கள் ஒருவருக்கொருவர் இடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பரிமாறுபவர்கள் வேகமாக ஓடிக் கொண்டிருந்தார்கள்.

இட்லி... வடை... சாம்பார்... இனிப்பு...

வாசனையே குமரனுக்குப் பசியைத் தூண்டியது.

தாத்தா வீட்டில் சாப்பிட்ட பழைய சோறு அவனுக்கு நினைவுக்கு வந்தது.

‘இன்று நல்ல சாப்பாடு சாப்பிடலாம்!’

அம்மாவைத் திரும்பிப் பார்க்கக்கூட அவனுக்கு பொறுமையில்லை.

“அம்மா, நான் போய் உட்கார்றேன்,” என்று சொல்லிவிட்டு, குழந்தைத்தனமான உற்சாகத்துடன் பந்திக்குள் ஓடினான்.

ஒரு இடத்தில் வாழை இலை முன்பே போடப்பட்டிருந்தது..

அவன் உடனே சென்று அமர்ந்துவிட்டான்.

அவனுடைய முகத்தில் மகிழ்ச்சி.

அவனுக்கு முன்னால் இலை.

சுற்றிலும் பெரியவர்கள்.

அவன் மனதிற்குள் தாத்தா சொன்ன வார்த்தைகள் அப்போது இல்லை.

ஒரு பரிமாறுபவர் அவன் இலையில் தண்ணீர் தெளித்தார்.

குமரன் இன்னும் உற்சாகமானான்.

‘இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பாடு வரும்.’

அவன் கண்கள் வாசலை நோக்கின.

அப்போது—

“தம்பி!”

ஒரு குரல்.

குமரன் திரும்பிப் பார்த்தான்.

அவனருகில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

“எழுந்திரு.”

குமரன் சிரித்தபடி,

“அடுத்த பந்திக்கா?” என்று கேட்டான்.

“ஆமாம்... எழுந்திரு.”

அவன் எழுந்தான்.

ஆனால் நகரவில்லை.

“இங்கதான் உட்காரலாமே?”

அந்த மனிதர் பதில் சொல்லவில்லை.

அவனுடைய தோளில் லேசாகத் தொட்டு,

“தம்பி, எழுந்திரு. அடுத்த பந்தியில் உட்கார்ந்து சாப்பிடலாம்.”

இந்த முறை குரலில் வேண்டுகோள் இல்லை.

கட்டளை இருந்தது..

குமரன் மெதுவாக எழுந்தான்.

அவனுடைய கண்கள் சுற்றிலும் ஓடின..

அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்களா?

யாராவது சிரித்தார்களா?

யாராவது ஏதாவது பேசினார்களா?

எதுவும் தெரியவில்லை.

ஆனால் அவனுக்கு மட்டும் எல்லோரும் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தது.

அவன் நின்றுகொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் பந்தியில் இருந்த ஒருவரிடம் பரிமாறுபவர்,

“சார், இன்னும் கொஞ்சம் வடை போடட்டுமா?”

என்று கேட்டார்.

அந்த வார்த்தை குமரனின் காதில் விழுந்தது.

வடை...

அவன் தன்னுடைய இலையைப் பார்த்தான்.

இன்னும் எதுவும் பரிமாறப்படவில்லை.

அவன் மீண்டும் உட்காரலாமா என்று ஒரு கணம் யோசித்தான்.

ஆனால் அருகில் நின்றிருந்த மனிதர் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்...

குமரன் தலையைக் குனிந்தான்.

மெதுவாகப் பந்தியிலிருந்து வெளியே வந்தான்.

வாசலருகே சென்று நின்றான்.

அவன் வயிறு பசியால் சத்தமிட்டது.

ஆனால் அந்தச் சத்தத்தைவிட அவன் மனதில் எழுந்த கேள்விதான் பெரிதாக இருந்தது.

‘என்னை மட்டும் ஏன் எழுப்பினார்கள்?’

அவன் மீண்டும் பந்தியைப் பார்த்தான்.

அவனைவிட வயதில் பெரியவர்கள் பலர் அங்கே அமர்ந்திருந்தார்கள்.

சிலர் விலை உயர்ந்த சட்டை அணிந்திருந்தார்கள்.

சிலர் தங்கச் சங்கிலி போட்டிருந்தார்கள்.

சிலர் சிரித்துப் பேசிக்கொண்டே சாப்பிடத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்..

அவர்கள் யாரையும் எழுப்பவில்லை.

தன்னை மட்டும் ஏன்?

குமரன் தனது சட்டையைப் பார்த்தான்.

கால்சட்டையைப் பார்த்தான்..

தாத்தா வாங்கிக் கொடுத்திருந்த அந்தச் சாதாரண உடைதான்.

அந்தக் கணத்தில் அவனுக்கு ஏதோ ஒன்று உள்ளுக்குள் உடைந்தது.

அவனுடைய கண்கள் மீண்டும் பந்தியைத் தேடின.

அங்கே ஒரு குழந்தை வடை எடுத்துக் கொண்டிருந்தது.

குமரன் தன்னையறியாமல் ஒரு அடி முன்னால் நகர்ந்தான்..

அதே நேரத்தில்—

“தம்பி!”

அதே குரல் மீண்டும்.

“நீ வீட்டுக்குப் போ. அம்மா வந்துடுவாங்க.”

அந்த வார்த்தைகள் அவனைத் தடுத்து நிறுத்தின.

குமரன் எதுவும் பேசவில்லை.

தலையை மட்டும் குனிந்துகொண்டான்.

அவன் திரும்பி நடந்தான்.

ஒவ்வொரு அடியும் கனமாக இருந்தது.

வாசலைத் தாண்டும்போது பந்தியில் இருந்து வரும் உணவின் வாசனை இன்னும் அவன் மூக்கைத் துளைத்தது.

அவன் திரும்பிப் பார்க்கவில்லை.

சில அடிகள் சென்றதும் தாத்தாவின் குரல் அவன் நினைவில் திடீரென ஒலித்தது:

“நாம் வசதி குறைந்தவர்கள் குமரா...”

அவன் நடையை நிறுத்தினான்.

மீண்டும் நினைவுக்கு வந்தது:

“குடும்பத்தோடு போனால், சாப்பிடுவதற்காகத்தான் வந்திருக்கிறார்கள் என்று நினைப்பார்கள்...”

அந்தக் கணத்தில் தாத்தா ஏன் தன்னை அன்று திருமணத்திற்கு அழைத்துச் செல்லவில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.

ஆனால் அந்தப் புரிதல் அவனுக்கு ஆறுதலைத் தரவில்லை..

அது அவன் சிறுவயது மனத்தில் ஒரு காயத்தை மட்டும் விட்டுச் சென்றது.

அன்று பந்தியில் இருந்து எழுப்பப்பட்ட குமரன்,

பசியோடு மட்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை..

தான் ஏழை என்பதன் அர்த்தத்தையும் முதன்முறையாக உணர்ந்துகொண்டு திரும்பினான்.

அது வெறும் சாப்பாட்டைப் பற்றிய விஷயம் அல்ல.

அது வறுமையின் நடுவிலும் காத்துக்கொள்ள வேண்டிய சுயமரியாதையைப் பற்றியது.

அன்று பந்தியில் இருந்து எழுப்பப்பட்ட அந்தச் சிறுவன், அந்த நாளுக்குப் பிறகு மாறிவிட்டான்.

விருந்து நடக்கும் எந்தத் திருமண வீட்டிற்குச் சென்றாலும், அழைக்காமல் பந்தியில் சென்று அமருவதில்லை.

வயது வளர்ந்தது.

வாழ்க்கை அவனுக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது..

ஆனால் அவன் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு பாடத்தை அவனுக்குக் கற்றுக் கொடுத்தவர் அந்தக் கமர்கட்டு மிட்டாய் செய்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்த அவனுடைய தாத்தாதான்.

அன்று தாத்தா அவனுக்குக் கற்றுக் கொடுத்தது வறுமையைப் பற்றிய பாடம் அல்ல; வறுமையிலும் மனிதன் இழக்கக் கூடாத மரியாதையைப் பற்றிய பாடம்.

பல ஆண்டுகள் கடந்த பிறகும், திருமணப் பந்தியைப் பார்க்கும்போதெல்லாம் குமரனுக்கு அந்த நாள் நினைவுக்கு வரும்.

அவனை எழுப்பிய அந்தக் குரலும்...

ஓரமாக நின்ற அந்தச் சிறுவனும்...

அவனுக்குப் புரியாமல் இருந்த தாத்தாவின் வார்த்தைகளும்...

எல்லாம் நினைவுக்கு வரும்.

அப்போது அவன் மனதிற்குள் ஒரே ஒரு வார்த்தை மட்டும் ஒலிக்கும்:

“தாத்தா... அன்று நீ சொன்னது எனக்கு அப்போது புரியவில்லை. இன்று புரிகிறது.”

  • 39