Feed Item
·
Added a post

மாசிடோனியாவின் விளையாட்டு மைதானம் சுட்டெரிக்கும் வெயிலிலும் ஜனத்திரளால் வழிந்து கொண்டிருந்தது..

யாருக்கும் அடங்காத , தெஸ்ஸாஸி நாட்டைச் சேர்ந்த அந்த குதிரை ,மைதானத்தில் யாரையும் நெருங்கவிடாமல் அருகில் வரும் அனைவரையும் துவம்சம் செய்து கொண்டிருந்தது.. மன்னர் பிலிப் இதை அடக்கப் போகும் வீரன் யார் ? என ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்..

" இந்த குதிரையை அடக்கி ஆளும் வீரன் இந்த நாட்டில் இல்லையா?" .. கூவிக் கூவி மாசிடோனியாவின் மானத்தை வாங்கிக் கொண்டிருந்தான்..குதிரையின் சொந்தக்காரன். . மன்னர் அருகில் அமர்ந்திருந்த சிறுவன் அலெக்சாண்டர் தனது தந்தையிடம் திரும்பத் திரும்ப தான் அந்த குதிரையைத் தான் அடக்கப் போவதாகக் கூறிக் கொண்டிருந்தான். விளையாட்டாக எடுத்துக் கொண்டிருந்த மன்னர் பிலிப்.. தனது மகன் சொல்வது விளையாட்டல்ல என்பதைப் புரிந்து கொண்டார்.. "இந்தக் குதிரையை மட்டும் நீ அடக்கி விட்டால் அதை உனக்கே தருகிறேன்".. அரை மனதுடன் மைதானத்துக்கு அனுப்பி விட்டு , வீரர்களிடம் எச்சரிக்கையாக இருந்து , தேவைப்பட்டால் அலெக்சாண்டரை பாதுகாக்கும் படியும்..சைகை காட்டினார்.

மைதானத்தில் குதிரையை அருகில் நோட்டமிட்டான். குதிரையின் பளபளக்கும் சருமத்தில் விரல்களை மெதுவாக ஓடவிட்டான்.. வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.மிகவும் அமைதியாக சுற்றி வந்து , பின் மெதுவாக தொட்டுத் தொட்டு மெல்ல எதிர் திசையில் திருப்பினான்.

" என்னடா இவன்! எப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் எல்லாம் மண்ணைக் கவ்வி விட்டார்கள் . இவன் பொடியன், அரசனுடைய மகன் என்பதால் சிரிக்கக் கூட பயமாக இருக்கிறது" என்று கிசுகிசுத்தனர்..

மைதானத்தில் சில நிமிடங்களில் குதிரையை மெதுவாக எதிர் திசையில் திருப்பிய அலெக்சாண்டர் , ஒரே தாவாக தாவி குதிரையின் மீது பாய்ந்து ஏறினான்.மைதானம் முழுவதையும் குதிரையுடன் வலம் வர, கரகோஷம் வானைப் பிளந்தது " இளவரசர் அலெக்சாண்டர்!! வாழ்க!" மன்னரால் தன் கண்களை நம்ப முடியவில்லை..வருங்காலம் ஒரு மிகப்பெரிய வீரனைக் காணத் தயாராகிவிட்டதை உணர்ந்தார். சொன்னது போலவே அக்குதிரையைப் பரிசளித்தார்.. அதன் பெயர் பியூசிபேலஸ்.

மன்னர் கேட்டார் " என் மகனே! நீ எவ்வாறு அக்குதிரையை அடக்கினாய்?"

" அப்பா! அந்தக் குதிரையின் கண்களில் பட்ட சூரியக் கதிர்கள் அதனை மிரள வைத்திருக்கிறது. இதைப் புரிந்து கொண்ட நான் ,அதனை அதன் எதிர் திசையில் திரும்பியதும் அமைதியாகி விட்டது." ..

மகனின் அறிவுக் கூர்மையை வியந்த மன்னர் ..மகனை ஆரத் தழுவிக் கொண்டார்.

இதன் பிறகு பியூசிபேலஸ் அலெக்சாண்டருடனேயே இறுதிவரை.. அவருக்கு தோள்கொடுத்தது.

கி.மு.326 ஜூலை மாதம் இந்தியாவின் ஜீலம் சீனாப் நதிகளுக்கிடையிலான பகுதியை ( தற்போதைய பஞ்சாப் ) ஆண்ட புருஷோத்தமன் என்ற மன்னர் போரசுடன் நடந்த போரில் அலெக்சாண்டர் வெற்றி அடைந்தாலும் அவரது குதிரை கடுமையான காயங்களால் மரணம் அடைந்தது. இதன் பின்னர் ஜீலம் நதியின் இருகரைகளிலும் இரு நகரங்களை உருவாக்கி, அதில் ஒரு நகருக்கு தனது பாசத்திற்குரிய குதிரையின் நினைவாக பியூசிபேலா என்று பெயரிட்டார்.

  • 37