Feed Item
·
Added a post

சின்னசாமி இந்த முறை தனது பழைய மொபட் ஸ்டார்ட் செய்ய மக்கர் பன்னுகிறது என்று , இரு சக்கர வாகன மெக்கானிக்கை பார்க்க செல்லும் போது

"அண்ணே வண்டி எவ்வளவு உழைக்க முடியுமோ,, அவ்வளவு தூரம் உழைத்து விட்டது. பேசாமல் வேற ஒரு புது வண்டி வாங்குங்கள்"

"இல்லைப்பா,, உனக்கு தெரியுமே என் குடும்ப சூழ்நிலை. இப்படி சிக்கனமாக இருந்தால்தான் என் பெண்ணை படிக்க வைத்து ஏதோ ஒரு நல்ல வேலையில் இருப்பவனுக்கு கட்டி கொடுத்தேன். அவர்களாவது இந்த கந்தக பூமியில் இருந்து வெளியே போகட்டும் என்று"

"அது சரி,, உங்கள் பட்டாசு கம்பெனி தான் சிவகாசியிலே பெரிய கம்பெனி,, உங்க முதலாளி தான் தீபாவளி க்கு நல்ல போனஸ் தருவாரே, அதை வைத்து புது வண்டி வாங்க வேண்டியது தானே"

"ஒரு மாதம் சம்பளம் போனஸாக கிடைக்கும், எப்படியும் 25,000 ரூபாய் க்கு குறையாது"

"அண்ணே, அங்கே பாருங்க அந்த பைக்கை, வாங்கி இரண்டு வருடம் தான் ஆச்சி, மகன் படிக்க காலேஜ் க்கு பணம் வேண்டும் என்று விற்க என்னிடம் தந்து இருக்கிறார்‌ . நீங்கள் பாருங்கள். உங்க மொபட்டை என்னிடம் கொடுத்துவிட்டு, ரூபாய் 25,000 கொடுத்தால் போதும். நீங்கள் அந்த புது பைக்கை எடுத்துக் கொள்ளலாம் "

அப்போ சின்னசாமி அங்கே அந்த பைக்கோடு நின்று கொண்டு இருந்த பத்து வண்டிகளை பார்க்கிறார்...

எல்லா வண்டிகளும் அவர் மாதிரி பட்டாசு உற்பத்தி கம்பெனி யில் வேலை பார்க்கும் தொழிலாளிகளின் வண்டிகள் தான் அவை. ஏதோ ஒரு குடும்பத்தின் அவசர தேவைக்காக அவை எல்லாம் விற்பனைக்கு அங்கே நின்று கொண்டு இருந்தது.

இப்போ சின்னசாமி க்கு மனதில் கொஞ்சம் ஆசை வந்தது. இந்த முப்பது வருடங்கள் உழைத்து , தன் பெண்ணை கரையேற்றி விட்டாச்சு. இனி பெரியதாக ஒன்றும் செலவு இருக்காது. தானும் தனது கிராமம் மாரனேரி யில் இருந்து சிவகாசி க்கு வருவதற்குள் இரண்டு முறை வண்டி ஆப் ஆகி விடுகிறது.

எனவே இந்த வருட தீபாவளி போனஸ் வாங்கியவுடன் இதே மெக்கானிக்கிடம் தனது பழைய வண்டியோடு தீபாவளி போனஸ் பணம் 25,000 கொடுத்து அந்த பைக்கை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அவரின் மனைவி ஒவ்வொரு ஞாயிறும் சிவகாசி மார்க்கெட் போக அவரை அந்த மொபட்டில் கூட்டிகிட்டு போகச் சொல்லும் போது, மறுத்து விடுவார். காரணம் வண்டி ஆப் ஆகி நின்று விடும் என்று.

இப்போ இனிமேல் அந்த பிரச்சினை புது பைக் வாங்கியவுடன் இருக்காது. கொஞ்சம் கற்பனையில் நினைத்து தான் பார்த்தார்,

அந்த பைக்கில் அவரின் மனைவியை ஏற்றிக்கொண்டு ஜாலியாக சிவகாசிக்குள் வருவதை கனவில் .

அவருக்கு ஒரு சுகத்தை கொடுத்தது. அதோடு இந்த பைக் வாங்கும் விசயத்தை மனைவியிடம் இப்போவே சொல்லி கூடாது, போனஸ் வந்தவுடன் பணத்தை கொடுத்து விட்டு, அந்த பைக்கோடு அவரின் மனைவி முன் நின்று ஆச்சிரியப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டார்.

அந்த கற்பனையும் அவருக்கு ஒரு சந்தோசத்தை தந்தது.

இதோ தீபாவளி போனஸ் வாங்க வேண்டிய நாளும் நெருங்கியது. நாளை போனஸ் கைக்கு வந்துவிடும். அப்போது தான் அவரின் மனைவி கனகம்மாள்

"என்னங்கா ஒவ்வொரு வருஷ தீபாவளி போனஸ் பணம் எல்லாம் இதுவரை நம்ம பொன்னு படிக்கவும், அவர்களின் கல்யாணத்திற்கும், பின்பு பெண்ணுக்கு சீர் செய்வதற்கும் சரியாக இருந்தது. இந்த வருடம் தான் செலவு இல்லாமல் இருக்கிறது" என்றார்.

அப்போ சின்னச்சாமி க்கு அவரின் மனைவி அந்த போனஸ் பணத்தை வேறு ஏதோ செலவுக்கு எதிர்பார்க்கிறார் என்று மட்டும் புரிந்தது. அவரும் அப்போ ஆமாம் என்று தலையாட்டினார்.

"என்னங்கா, நான் ஒன்னு சொன்னால் கேட்பீர்களா, நமக்கும் கல்யாணம் ஆகி முப்பது வருடங்கள் ஆயிற்று,, நானும் இதுவரை உங்களிடம் எதுவுமே கேட்கவில்லை "

சரிதான், தனது மனைவி இதுவரை அவளுக்கு எதுவும் வேண்டும் என்று கேட்கவில்லை. இந்த முறை ஏதோ கேட்க வருகிறார் என்று புரிந்தது. எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.

அவரின் புது பைக் கனவு சற்று தூரமாகவே போய்விட்டது. அவரின் மனைவியோடு பைக்கில் சுற்றும் ஆசையும் மறைய தொடங்கியது.

அவரின் கனவுகள் கற்பனை யானது.

"சரிம்மா, ஏதோ கேட்க வருகிறாய் என தெரிகிறது. சொல்லு அந்த தீபாவளி போனஸ் பணத்தை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லு."

"இதோ பாருங்கள் என் காதினை "

"ஆமாம், எங்கே உன் தோடு இப்போ பிளாஸ்டிக் கம்மலை போட்டு இருக்கே"

"ஆமாங்க, இதோ பாருங்கள் என் கம்மல் உடைந்து விட்டது. இதை போட முடியாது.

இதை நகை கடையில் கொடுத்து விட்டு உங்கள் போனஸ் பணத்தை கொடுத்து புதிய தோடு வாங்க வேண்டும் என்று இருக்கிறேன்" என்றாள் .

சின்னசாமி மனதிற்குள் தன் பைக் வாங்கும் ஆசையினை அவளிடம் சொல்லாதது நல்லது என்று நினைத்தார்.

போனஸ் பணம் கைக்கு வந்தது, சின்னசாமி தனது மனைவியை அழைத்துக்கொண்டு நகைக் கடைக்கு பெருமையாக போனார். அவரின் பழைய கம்மலை கொடுத்து விட்டு அதோடு போனஸ் பணத்தையும் கொடுத்து, புது கம்மல் ஜோடியினை வாங்கினார்கள்.

"ஆமாம், அடுத்த வாரம் தீபாவளி வருது இல்லே அப்போ இந்த புது கம்மலை போட்டுக்கோ" என்றார் தன் மனைவியிடம்.

உலகத்திற்கே மத்தாப்பு வெளிச்சத்தை கொடுக்கும் அந்த சிவகாசி பட்டாசு ஆலை ஊழியர் ஆன சின்னசாமிக்கும் மகிழ்ச்சி அந்த தீபாவளி அன்று காலை , தனது மனைவியின் காதில் இருக்கும் புது கம்மலை பார்க்கும் போது வரும் என்ற சந்தோஷத்தில் இருந்தார்.

தீபாவளி அன்று விடிந்தது.

சின்னச்சாமி ஆவலாக தன் மனைவியின் காதை பார்க்கும் போது, அங்கே அந்த பிளாஸ்டிக் தோடே இருந்தது. அப்போ அவரின் மனைவி.

"என்னங்கா,, இரு தினங்கள் முன்பு நமது மகள் செல்வி மதுரையில் இருந்து வந்து இருந்தாலே"

"ஆமாம், அவளது இரண்டாவது மகளுக்கு இருக்கன்குடியில் வைத்து மொட்டை அடித்து, காது குத்த கூப்பிட வந்தாள். இப்போ அதற்கு என்ன.

"இல்லைங்க, நாம் அவளின் முதல் பிள்ளைக்கு காது குத்தும் போது புது தோடு வாங்கி கொடுத்தோம்.. இரண்டாவது பிள்ளைக்கு நாம் செய்ய வேண்டியது இல்லை என்றாலும் அதுவும் நமது பேத்திதானே... அதுக்கு சும்மா இருக்க முடியுமா"

"அதுக்கு நீ என்ன சொல்லவாரே"

"வேற ஒன்னும் இல்லை, நீங்கள் எனக்கு புதுசா வாங்கி வைத்த அந்த கம்மலை நான் மகள் செல்வி கிட்டே கொடுத்து அனுப்பி விட்டேன், அவளது குழந்தைக்கு காது குத்தியதும் போட்டுக்க சொல்லி. உடனே கொடுத்தால் தானே நமது மகளுக்கும் அவ மாமியார் வீட்டில் மரியாதை இருக்கும் "

இப்போ சின்னச்சாமி தனது மனைவியை நினைத்து பெருமை பட்டார்.

தானாவது தனது பழைய மொபட்டை இழக்காமல் தனது புது பைக் கனவை மட்டுமே இழந்தார் என்று.

தனது மனைவியோ இன்னும் ஒரு படி மேலே போய், தன் காதில் இருந்த பழைய கம்மலையும் இழந்து விட்டாளே என்று.

கம்மல் கனவு போனல் என்ன, ....

புது பைக் கனவு கானாமல் போனால் என்ன.......

தன்னால் முடியும்,

அடுத்த ஆண்டு தீபாவளி போனஸில் தனது மனைவிக்கு , புது கம்மல் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இன்னும் ஒரு வருடம் உழைக்க தயார் ஆனார் சின்னச்சாமி மகிழ்ச்சியோடு..

இப்படித்தான் ஏறக்குறைய எல்லா தொழிலாளர்களும், ஒவ்வொரு வருடமும் தீபாவளி போனஸ் வாங்கும் முன்பே அவர்களின் கண்களில் ஒவ்வொரு வருடமும் கனவுகள் வந்து செல்கிறது.

  • 47