கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் நூலகத்திற்குச் சென்று புத்தகங்களைப் பார்த்த போது, போலியான ஆசிரியர் பெயர்கள், இல்லாத வரலாற்றுத் தகவல்கள், அதிக விலை ஆகியவை இருப்பதாகக் கூறினார். ஆயிரத்து எண்ணூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டை அடுத்து பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன், இது கடந்த திமுக ஆட்சியில் நடந்ததாகவும், இதை இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு ஊழல் என்றும் கூறியுள்ளார். பதினேழு இலட்சம் ரூபாய் செலவில் புத்தகங்கள் வாங்கப்பட்டதாகவும், ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்புக் குழு விசாரணை நடத்தும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. சென்னை, மதுரை நூலகங்களிலும் இது போன்ற புத்தகங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுக இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளது. புத்தகங்கள் வாங்கியது குறித்த முழு ஆவணங்களையும் அரசு வெளியிட வேண்டும் என்று திமுக கேட்டுள்ளது. போலிப் புத்தகங்களில் சூன் மாத முத்திரை இருப்பதாகவும், அதனால் முழு உண்மையை விசாரணையில் தான் தெரிந்து கொள்ள முடியும் என்றும் திமுக தரப்பில் கூறப்படுகிறது. இது இன்னும் குற்றச்சாட்டு நிலையில் தான் உள்ளது.