Feed Item
·
Added a news

கனடாவிற்கு வெளியே மருத்துவக் கல்வியை முடித்த பட்டதாரிகள், பிரிட்டிஷ் கொலம்பியாவின் பின்தங்கிய அல்லது தொலைதூரப் பகுதிகளில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற மாகாண அரசின் நிபந்தனை சட்டவிரோதமானது என பிரிட்டிஷ் கொலம்பியா உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து மருத்துவப் பயிற்சிக்கு விண்ணப்பிப்போருக்கு இத்தகைய "சேவைத் திரும்பச் செலுத்தல்" நிபந்தனையை விதிக்க மாகாண சுகாதார அமைச்சுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என நீதிபதி மெத்யூ கெர்ச்னர் தெரிவித்துள்ளார்.

கனடிய மருத்துவக் கல்லூரிகளில் படித்த பட்டதாரிகளுக்கு இல்லாத இந்த நிபந்தனை, வெளிநாட்டுப் பட்டதாரிகளுக்கு மட்டும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒருவர் எங்கு வாழ வேண்டும் என்பதை தீர்மானிப்பது அவருடைய அடிப்படைத் தனிப்பட்ட முடிவாகும். அரசின் தலையீடின்றி வாழும் தனிநபர் சுதந்திர உரிமையில் அரசாங்கம் தலையிட முடியாது என நீதிபதி மெத்யூ கெர்ச்னர் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தை மீறிச் செயல்படும் மருத்துவப் பட்டதாரிகளுக்கு கடுமையான நிதி அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்ததாக நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயிற்சி வாய்ப்பைப் பெறுவதற்காக வெளிநாட்டுப் பட்டதாரிகள் வேறு வழியின்றி இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் தேவையான சட்ட மாற்றங்களைச் செய்யுமாறு பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதார அமைச்சுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், இத்தீர்ப்பு கிராமப்புறங்களில் மருத்துவர்களின் இருப்பை உடனடியாகப் பாதிக்கக்கூடும் என்பதால், அமைச்சு இப்பிரச்சினையை சீர்செய்வதற்காக இத்தீர்ப்பின் அமலாக்கத்தை 60 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

  • 27