Feed Item
·
Added a news

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. மொத்தம் 24 அடி உயரம் கொண்ட இந்த ஏரியின் நீர்மட்டம் 21 அடியை கடந்துள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று மாலை 4 மணி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு வெள்ள முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வழக்கத்தை விட இந்த முறை வடகிழக்கு பருவமழை அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி அணைகள், ஏரிகளின் நீர்மட்டங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி விரைவாக நிறைந்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் மழை மற்றும் கிருஷ்ண நதிநீர் வருகை உள்ளிட்டவற்றால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியாகும். இன்று நீர்மட்டம் 21 அடியை எட்டி உள்ளது. இன்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 21.20 அடியாக இருந்தது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று மாலை 4 மணிக்கு வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரிக்கு இன்று காலையில் வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது.அதன்பிறகு பெய்த கனமழையின் காரணமாக இப்போது ஏரிக்கு வினாடிக்கு 1000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக தண்ணீரை திறந்து விட காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார்.

சென்னை, காஞ்சிபுரத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்தாலும் நேரம் ஆக ஆக தண்ணீர் திறப்பு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

  • 927