பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோன் பெயர் சமீபகாலமாகச் செய்திகளில் அதிகம் இடம்பிடித்து வருகிறார். நாக அஷ்வின் இயக்கும் பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 AD' படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்தும், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'ஸ்பிரிட்' படத்திலிருந்தும் அவர் விலகியுள்ளார். இந்த விலகல்கள் பெரும் விவாதங்களை கிளப்பின. குறிப்பாக பாலிவுட் நடிகர்கள் மற்றும் பாலிவுட் இயக்குநர்கள் படங்களில் நடிப்பதைத்தான் அவர் விரும்புகிறார். தென்னிந்திய சினிமாக்களில் நடிப்பதை அவர் விரும்பவில்லை என்று எல்லாம் சிலர் கருத்து தெரிவித்து விமர்சித்தார்கள்.
அதே நேரத்தில், ஐஎம்டிபி (IMDb) வெளியிட்ட 25 ஆண்டுகால இந்திய சினிமா குறித்த சிறப்பு அறிக்கையில் அவர் முன்னிலை வகித்தது குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இந்த அறிக்கையில் தீபிகா படுகோன் எப்படி முதலிடம் பிடித்தார் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. ஐஎம்டிபி சமீபத்தில் வெளியிட்ட "25 ஆண்டுகள் இந்திய சினிமா 2000-2025" என்ற அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டிலும் அதிகம் பிரபலமான முதல் 5 திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொத்தம் 130 படங்களில், தீபிகா படுகோன் நடித்த 10 படங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன. ஷாருக்கான் 20 படங்களுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், அமீர் கான் மற்றும் ஹிருத்திக் ரோஷன் தலா 11 படங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆலியா பட் ஆகியோரை விடவும் தீபிகா இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.
இந்த அறிக்கை குறித்து தீபிகா படுகோன் கூறுகையில், "எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே, ஒரு பெண்ணாக நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று பல ஆலோசனைகள் எனக்கு பல இடங்களில் இருந்து வந்தன. நான் ஒருபோதும் பயப்படவில்லை. கேள்வி கேட்கத் தயங்கியதில்லை. சற்று கடினமான பாதையை தேர்ந்தெடுத்து, அனைவரும் பழக்கப்பட்ட ஸ்டீரியோ டைப்பை உடைத்து, ஒரு புதிய பாதையை உருவாக்க முயற்சித்தேன். அதுவே என்னைத் தற்போதுள்ள நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. எனது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் சக ஊழியர்கள் என் மீது வைத்த நம்பிக்கை, தைரியமான முடிவுகளை எடுக்க எனக்கு உதவியது. அவர்களின் நம்பிக்கை என் பலமாக மாறியது.
சமீபத்தில் தீபிகா படுகோன், 'கல்கி 2898 AD' படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்தும், 'ஸ்பிரிட்' படத்திலிருந்தும் விலகியது குறித்துத் திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 'கல்கி' படத்திற்கு "அதிகப்படியான டெடிகேஷன் அதாவது அர்ப்பணிப்பு" தேவை என்றும், 'ஸ்பிரிட்' படத்திற்கு எட்டு மணி நேர கால்ஷீட் கோரப்பட்டதால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இந்த விலகலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியிலும், தீபிகா பெரிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஷாருக்கான் நடிக்கும் 'கிங்' திரைப்படத்தில் நடிப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், கடந்த பத்தாண்டுகளில் ஐஎம்டிபி-யில் அதிகம் தேடப்பட்ட இந்திய நடிகர்கள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
