அரசியலில் களம் இறங்கியுள்ள விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தை ஹெச்.வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் என ஏராளமானோர் நடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது ஜனநாயகன்.
படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பாக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் பெரிய மைல் கல்லாக அமையும் என்பது தளபதி ரசிகர்களின் திண்ணமான நம்பிக்கை. ஜனநாயகன் வருவதால்தான் 9ஆம் தேதி வெளியாகவிருந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி சில நாட்கள் தாமதமாக ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.
படத்தில் இடம்பெற்றிருக்கும் தளபதி கச்சேரி என்ற பாடல் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. தெருக்குரல் அறிவு பாடலை எழுத விஜய், அனிருத், அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருந்தார்கள். வழக்கம்போல் பாடல் பலரது வரவேற்பை பெற்றது. அதிலும் விஜய், பூஜா, மமிதா ஆகியோரின் நடனமும் கவனத்தை ஈர்க்க; விஜய்யை இப்படி ஜாலியான டான்ஸோடு பார்ப்பது இதுதான் கடைசியோ என்று ரசிகர்கள் வருத்தப்படவும் ஆரம்பித்தார்கள்.
பாடலின் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை கொண்டாடும் வகையிலும், அவர் அனைத்தையும் மாற்றப்போகிறார் என்பதையும் குறிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தன. அதேசமயம் மமிதாவின் காஸ்ட்யூமை பார்த்து ஆஹா இது பகவந்த் கேசரி படத்தில் இடம்பெற்ற பாடலில் இடம்பெற்ற மாதிரியே இருப்பதால் இது அந்தப் படத்தின் ரீமேக்தானோ என்றும் சந்தேகத்தை கிளப்பினார்கள்.
படத்தின் ஆடியோ வெளியீட்டு எங்கே, எப்போது நடக்கும் என்ற ஆவலும் இருந்தது. இந்நிலையில் அதுகுறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டிருக்கிறது.
ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 27ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வீடியோவில் மலேசிய வாழ் விஜய் ரசிகர்கள் அவரை பற்றி எமோஷனலாக பேசும் காட்சிகளும் இருக்கின்றன. முன்னதாக, திமுகவை தொடர்ந்து விஜய் அட்டாக் செய்துவருவதால் ஆளுங்கட்சி சார்பில் ஜனநாயகன் படத்துக்கும், அதன் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கும் அழுத்தம் வரலாம்; எனவே வெளிநாட்டில் நடத்த விஜய் திட்டமிட்டிருக்கிறார் என்று தகவல்கள் வந்தன. இப்போது வந்திருக்கும் அறிவிப்பு அவை அனைத்தும் உண்மைதான் என்பதை உறுதி செய்திருக்கிறது.