ஒரு ஊரில் 'பரமசிவம்' என்ற பெரிய தத்துவஞானி ஒருவர் இருந்தார். அவர் எவ்வளவு பெரிய தத்துவத்தையும் சாக்லேட் மாதிரி சுலபமாகப் புரிய வைத்துவிடுவார் என்று ஊர் முழுக்கப் பெயர்.
அதே ஊரில் எதற்கெடுத்தாலும் டென்ஷனாகும் 'குப்புசாமி' என்ற வியாபாரி இருந்தார்.
ஒரு நாள் குப்புசாமி ரொம்பவும் சோகமாக பரமசிவத்திடம் வந்தார்.
"சாமி, என் வாழ்க்கையே ஒரு குழப்பமா இருக்கு. கடையில வியாபாரம் ஓடல, வீட்ல பொண்டாட்டி சண்டை, பையன் படிக்க மாட்டேங்குறான். நிம்மதியாவே இருக்க முடியல.
இதனால் எனக்கு டென்ஷன் ஏறி எனது உடல் நிலை வேறு சரியில்லாமல் போகிறது.
இந்த உலகத்துல மனுஷன் ஏன் இப்படி கஷ்டப்படணும்? இந்த வாழ்க்கையோட தத்துவம்தான் என்ன?" என்று புலம்பினார்.
பரமசிவம் புன்னகைத்தார். "தம்பி, கவலைப்படாதே. உன் கேள்விக்கு பதிலைக் கடைக்குப் போய் தேடுவோம்" என்றார்.
குப்புசாமிக்கு ஆச்சரியம். "கடைக்கும் தத்துவத்துக்கும் என்ன சம்பந்தம்?"
"வழியில் புரியும், வா" என்று அவரை அழைத்துக்கொண்டு ஒரு டீக்கடைக்குச் சென்றார் பரமசிவம்.
அங்கு குப்புசாமி அப்போது தான் எண்ணெய் சட்டியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சூடான வடையை ஆசையாகக் கையில் எடுத்தார். அது பயங்கர சுடச்சுட இருந்தது. எடுத்த உடனே கையைச் சுட்டுகொண்டு "அச்சோ!" என்று கத்திக் கீழே போட்டுவிட்டார். உடனே பக்கத்தில் இருந்த ஒரு காகம், அந்த வடையைக் கொத்திக்கொண்டு பறந்து போய்விட்டது.
இதைப் பார்த்த பரமசிவம், குப்புசாமியின் தோள் மீது கை போட்டுச் சொன்னார்:
"இப்போ உனக்கு என்ன புரிஞ்சது குப்புசாமி?"
குப்புசாமி யோசித்துவிட்டுச் சொன்னார், "எதுலயும் அவசரப்படக் கூடாது, அப்படி அவசரப்பட்டா வடை போச்சுனு அர்த்தம்!"
பரமசிவம் தலையில் அடித்துக்கொண்டார். "அட முட்டாளே! அதுவல்ல தத்துவம். இந்த உலகத்துல எதையெல்லாம் நீ ரொம்ப ஆசையாகவும் அவசரமாகவும் பிடிச்சுக்கப் பார்க்கிறியோ, அதெல்லாம் உன்னைச் சுட்டுகிட்டே இருக்கும். நீ அதைத் தாங்க முடியாம தூக்கி எறியும்போது, வேற யாரோ ஒருத்தர் (இங்கே காகம்) வந்து அதைத் தட்டிட்டுப் போயிடுவாங்க.
வாழ்க்கைங்கிறது சூடான வடை மாதிரிதான். பசிக்குதுன்னு அப்படியே முழுங்கினா வாய் வெந்துடும். பொறுமையா, பக்குவமா ஆறிச் சாப்பிடணும். உன்னோட டென்ஷனும் அவசரமும்தான் உன் உடலைக் கெடுக்குது. எதையும் இருக்கிறபடியே ஏற்றுக்கோ, கவலை பறந்துடும்!"
குப்புசாமிக்கு அப்போதுதான் உறைத்தது. "அப்போ கடையில நஷ்டம் வந்தாலும், பையன் படிக்கலைனாலும் சூடான வடையை ஆறிச் சாப்பிடுற மாதிரி கூலா ஹேண்டில் பண்ணனும், அப்படித்தானே சாமி?" என்றார்.
"ரொம்ப கரெக்ட்! வடை போனாலும் வயிறு போகாது, கவலைப்படாதே!" என்று சொல்லிச் சிரித்தார் பரமசிவம்.
குப்புசாமியும் தன் டென்ஷனை அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு, ஒரு டீயும் வடையையும் ஆர்டர் செய்து நிம்மதியாகச் சாப்பிடத் தொடங்கினார்.
அளவுக்கு அதிகமான ஆசையும் பதற்றமும் எப்போதும் கவலையையும் இழப்பையையும் தான் தரும்."
நாம் வாழ்க்கையில் எதையாவது அவசரப்பட்டு அல்லது பொறுமையின்றி அடைய நினைக்கிறோம். அப்படிப் பக்குவமில்லாமல் அதை உடனே அனுபவிக்கப் பார்க்கும்போது, அதுவே நம்மைச் சுட்டு காயப்படுத்துகிறது (மன உளைச்சலைத் தருகிறது).
நாம் பதற்றத்தில் அதைத் தவறவிடும்போது, அந்த வாய்ப்பையோ அல்லது பொருளையோ மற்றவர்கள் மிகச் சுலபமாகத் தட்டிச் சென்றுவிடுவார்கள்.
வாழ்க்கை என்பது சூடான வடை போன்றது. பசி இருக்கிறது என்பதற்காக அப்படியே முழுங்க முடியாது; கொஞ்சம் ஆறவைத்து, பக்குவமாக அனுபவிக்க வேண்டும். பொறுமையும் நிதானமுமே அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி!