ஒரு வயசான ஆளு நிலத்திலே உழுது கொண்டிருந்தார்.
கிழிந்து போன ஒரு சின்ன துண்டைதான் இடுப்பில் கட்டியிருந்தார்.
தலையில் ஒரு கந்தலை சுற்றி இருந்தார்.
உடம்பு பூராவும் சேறு.
ஏர் ஓட்டிக்கிட்டு இருக்கிறவர் வேறுஎப்படி இருப்பார்?
இருந்தாலும் அந்த ஆளு ரொம்ப ஜாலியா பாட்டு பாடிக்கிட்டே உழுது கொண்டிருந்தார்.
உடம்பிலேதான் அவர் ஏழையே தவிர மனசுல அவர் ஏழையா தெரியல.
அந்த சமயத்தில் அந்த நாட்டு ராஜா அந்தப்பக்கமாக வேட்டைக்கு போயிட்டு பரிவாரங்களோடு திரும்பி குதிரைமேலே வந்து கொண்டிருந்தார்.
ராஜா இந்த வயசான விவசாயியைப் பார்த்தார்.
அந்த ஆளு ரொம்பவும் ஏழைங்கிறது அவரைப் பார்த்தாலே பளிச்சுன்னு தெரியுது.
கட்டிக்கிறதுக்கு நல்ல துணி இல்லை.
உடம்பு இளைச்சுப் போய் இருக்கு. வயிறு முதுகோடு ஒட்டி போய் இருக்கு.
கண்ணு குழி விழுந்து போய் இருக்கு.
ஆனாலும் முகத்தை பார்த்தா சந்தோஷமா இருக்கிற மாதிரி இருக்கு.
இவ்வளவு உற்சாகமாக பாடிக்கொண்டிருக்காரேனு ஆச்சரியமாக பார்த்தார் ராஜா.
கொஞ்சம் பேச்சு குடுத்து பாக்கலாம்னு முடிவு பண்ணினார்.
ஐயா பெரியவரே கொஞ்சம் இப்படி வர முடியுமான்னார்.
பொழுது போறதுக்குள்ள இந்த வயல் பூராவும் உழுதாகணும். அதனாலே பேசுவதற்கு நேரமில்லைனார் பெரியவர்.
என்ன அவ்வளவு அவசரமா?
மீதி இருந்தா நாளைக்கு உழுதுக்க கூடாதா?
அது சரி உனக்கு எத்தனை ஏக்கர் நிலம் இருக்கு?
விசாரிச்சார் ராஜா.
எனக்கு சொந்தமா உள்ளங்கை அளவு கூட நிலம் இல்லை.
இது எனது எஜமானன் நிலம்.
இதை பூராவும் உழுது முடிச்சாதான் அவர் கூலி கொடுப்பார்.
கூலிக்கு உழுகிறேன் உங்க கிட்ட பேசிகிட்டு இருந்தா அவருக்கு துரோகம் பண்ண மாதிரி ஆகும்னார்.
ராஜா குதிரையை விட்டு இறங்கி வரப்பிலே நடந்து அந்த பெரியவர் கிட்ட பேச ஆரம்பிச்சார்.
ஒரு நாள் பூரா உழுதா உனக்கு எவ்வளவு கூலி கிடைக்கும்.
எட்டணா கிடைக்கும்னார்.
இவ்வளவுதானா இதை வைத்துக்கொண்டு நீ எப்படி காலம் தள்ளுறே.
ஒன்னும் கவலை இல்லைனார்.
ராஜாவுக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு.
எட்டணா கூலி வாங்குறவர் கவலை இல்லாமல் இருக்கார்.
ஏராளமான வசதியுடைய என்னால் கவலை இல்லாமல் வாழ முடியவில்லை என்று நினைத்தார்.
அது சரி எட்டணாவில் எப்படி குடும்பம் நடத்துற? என கேட்டார்.
எனக்கு கிடைத்த எட்டணாவில் இரண்டு அணா குடும்பத்துக்கு செலவழிக்கிறேன்.
இரண்டு அணா பழைய கடனுக்கு தருகிறேன்.
இரண்டு அணா தர்மம் செய்கிறேன். இரண்டு் அணா வட்டிக்கு கொடுக்கிறேன்.
ஒரு குறையும் இல்லைனார்.
ஒன்னும் புரியல ராஜாவுக்கு .
ஐயா எனக்கும் என் மனைவிக்கும் இரண்டு அணா செலவாகுது.
வயதான அம்மா அப்பா சின்ன வயசிலேயே என்னை காப்பாத்தினாங்க அவங்களுக்கு இரண்டு அணா செலவாகிறது.
அது பழைய கடன்.
என் தங்கச்சி ஒருத்தி ஆதரவில்லாத நிலையில் தன் மகனுடன் வீட்டிலேயே இருக்கு.
அவளுக்கும் அவள் மகனுக்கும் இரண்டு அணா செலவு பண்றேன். அது தர்மம்.
எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்காங்க அவங்களுக்கு இரண்டு அணா.
அது வட்டிக்கு கொடுக்கிறது மாதிரி பிற்காலத்தில் அவங்க என்னைக் காப்பாத்துவாங்க.
அந்த வகையிலே நான் திருப்தியா வாழ்ந்துகிட்டு இருக்கேன்னார்.
ராஜாவுக்கு அர்த்தம் புரிய ஆரம்பித்தது அந்த நிலத்தை விலை கொடுத்து வாங்கி அந்த பெரியவருக்கு தானமாக கொடுத்துவிட்டார்.
உழுதவருக்கே நிலம் சொந்தம் ஆயிட்டது.
அரசனுக்கும் ஆறுதல் கிடைச்சதாம்.
இந்தக் கதையோட படிப்பினை என்னன்னா எட்டணா வருமானத்தை வச்சிக்கிட்டு இப்படி காலம் தள்ளுவது அப்படிங்கறது இல்லை.
நாம் எவ்வளவு தான் அதிகமாக சம்பாதித்தாலும் அந்தப் பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும்.
அப்போதுதான் திருப்தியாக கடனில்லாமல் வாழ முடியும் . அதோடு நிம்மதியும் மகிழ்ச்சியும் எம்மிடம் எப்போதும் குடியிருக்கும்.