ரஜினிக்கு மனைவியாகவும் மன்னன் படத்தில் நடித்திருந்தார். இவர் அறிமுகம் ஆனது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படம் தான்.
விதி சில நேரங்களில் எவ்வளவு அழகாகத் தன் விளையாட்டைத் தொடங்குகிறது என்பதற்கு உதாரணமாக தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். எதிர்பாராமல் நடக்கும் ஒரு சிறு தற்செயல் நிகழ்வு, ஒருவரின் வாழ்க்கைப் பாதையையே எப்படி மாற்றியமைக்கிறது என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா, கார்த்திக், ராதா, ராதிகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில் அவர் அறிமுகம் செய்த முன்னணி நடிகை ஒருவர் தான் விஜயசாந்தி. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர், சோலோ ஹீரோயினாக பல வெற்றிப்படங்களையும் போலீஸ் கேரக்டரிலும் நடித்து அசத்தியுள்ளார்.
குறிப்பாக ரஜினிக்கு மனைவியாகவும் மன்னன் படத்தில் நடித்திருந்தார்.
இவர் அறிமுகம் ஆனது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படம் தான். இயக்குநர் பாரதிராஜா அவர்கள் ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் பஞ்சர் ஆனது. அதைச் சரிசெய்ய டிரைவர் குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும் எனக் கூறியுள்ளார். இதனால் "வெயிலில் நிற்பதை விட, அருகில் இருக்கும் இந்த ஸ்டூடியோவில் போய் அமருங்கள் சார்" என்று டிரைவர் சொல்ல, பாரதிராஜாவும் சம்மதித்து உள்ளே சென்றார்.
அந்த ஸ்டூடியோவில் சும்மா அமர்ந்திருக்கப் பிடிக்காமல், அங்கு இருந்த புகைப்படங்களை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே இருந்த ஒரு பெண்ணின் புகைப்படம் அவர் கண்களில் பட்டது. அந்தப் பெண் தான் பின்னாளில் புகழ்பெற்ற அந்த நடிகை. "யார் இந்தப் பெண்? இவரை உடனே பார்க்க வேண்டுமே!" என்று பாரதிராஜா ஆர்வம் காட்டினார். உடனடியாக அந்தப் பெண்ணின் தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இயக்குநர் பாரதிராஜா ஒரு புது முகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார், உங்கள் மகளின் புகைப்படம் அவருக்குப் பிடித்திருக்கிறது" என்ற செய்தி கேட்டு அந்தத் தந்தை தனது மகளை அழைத்துக் கொண்டு பாரதிராஜாவைச் சந்திக்கச் சென்றார். சந்திப்பு முடிந்த கையோடு, பாரதிராஜா அவருக்கு ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தச் சொன்னார். புகைப்படங்களில் அந்தப் பெண் மிக அழகாகவும், கேரக்டருக்கு பொருத்தமாகவும் இருந்தார். பாரதிராஜாவுக்குப் பிடித்துப் போனது. "ஓகே பண்ணிடலாம்!" என்று அவர் பச்சைக்கொடி காட்டிய அடுத்த சில நிமிடங்களிலேயே எல்லாம் மளமளவென நடந்தன.
மேக்கப், காஸ்டியூம் என அனைத்தும் மின்னல் வேகத்தில் முடிந்து, அந்தப் பெண் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். கார் பஞ்சர் ஆனது ஒரு தற்செயலான விஷயம் என்றாலும், அது ஒரு மாபெரும் கலைப்பயணத்தின் தொடக்கமாக அமைந்தது தான் விதியின் சுவாரஸ்யம். பின்னாளில் விஜயசாந்தி அரசியலிலும் அடியெடுத்து வைத்து அசத்திய நிலையில், தற்போது சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.