Feed Item
·
Added article

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்தது அந்த ஊட்டி சம்பவம்.

ஆக்சிஜன் குறைவான இடங்களில் அதிகமாக உடற்பயிற்சி செய்யக்கூடாது.

இதை எங்களுக்கு உணர்த்தியது

நடிகர் முத்துராமனுக்கு நேர்ந்த எதிர்பாராத முடிவு.

கல்லூரி காலத்தில் (1981) எங்களை கலக்கமும், அதிர்ச்சியும் அடையச் செய்தது பத்திரிகைகளில் வந்த அந்தச் செய்தி.

“முத்துராமன் செத்துப் போயிட்டாராம்."

இதை அறிந்து நாங்கள் அதிர்ந்து போனோம். ஏனெனில் எக்ஸர்சைஸ் எல்லாம் செய்து, ஒழுங்காக தன் உடலைப் பராமரித்து வந்தவர் நடிகர் முத்துராமன்.

அதிலும் ஊட்டிக்கு ஷூட்டிங் போன இடத்தில் உடற்பயிற்சி செய்து, அதனால்தான் அவர் உயிர் இழந்து போனார் என்று செய்தித்தாளில் படித்தபோது...

எக்ஸர்சைஸ் மீதே எங்களுக்கு நம்பிக்கை கொஞ்சம் குறைந்து போனது.

அதனால் ஹாஸ்டலில் தினமும் காலையில் எக்ஸர்சைஸ் செய்து வந்த நண்பர்களின் எண்ணிக்கையும் கூட, கொஞ்சம் குறைந்துதான் போனது.

ஆனால் அதன் பின் நடிகர் சிவகுமார் எழுதியிருந்ததைப் படித்தபோதுதான்,

முத்துராமன் உயிர் இழந்ததற்கான உண்மையான காரணம் தெரிந்தது.

ஆக்சிஜன் குறைவான மலைப்பிரதேசங்களில், அளவுக்கு அதிகமாக எக்ஸர்சைஸ் செய்யக் கூடாதாம்.

அதை மீறி உடல் பயிற்சி செய்ததுதான் முத்துராமன் உயிர் இழந்ததற்கான உண்மையான காரணமாம்.

இதுபற்றி நடிகர் சிவகுமாரின் பதிவிலிருந்து :

“1981 - அக்டோபர்- 16 -ந்தேதி .

காலை 6.30 மணி.

ஊட்டி - கால்ப் காட்டேஜ்

'ஆயிரம் முத்தங்கள்' - படத்திற்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தேன் .

உதவியாளர் ஓடிவந்து 'சார்,முத்துராமன் சார் ரோட்ல மயக்கமா கிடக்கறார் சார்' என்றார். ஓடிச்சென்று காரில் ஏற்றி ஊட்டி டாக்டரிடம் காட்ட,

“உயிர்போய் அரைமணி ஆகிவிட்டது” என்றார்.

மீண்டும் காட்டேஜ்.

காரிலிருந்து உடம்பை நிமிர்த்தி இறக்கும்போது அவர் மூச்சுக்காற்று ‘குபுக்’கென என்மேல் பட,

“அய்யோ உயிரோட இருக்கறவரை செத்துப்போயிட்டார்னு டாக்டர் சொல்லிட்டாரே... அண்ணா, அண்ணா எழுந்திருங்கண்ணா” என்று நானும் நடிகை ராதா, அவர் அம்மா, மூவரும் யூகலிப்டஸ் ஆயிலை அவர் உடம்பு முழுக்க பூசி தேய்த்தவாறு கதறினோம். அவர் பேசவில்லை . போய்விட்டார்.

ரத்த அழுத்த நோய் பல ஆண்டுகளாக அவருக்கு ; படத்தில் ராதாவுக்கு அப்பாவாக நடிக்க வந்தவர் -

நான் முதல் நாள் காலை ஓடியதைப் பார்த்து ஆர்வத்தில் ஓடியிருக்கிறார்.

ஊட்டியில், 7000 அடி உயரத்தில் அதிகாலையில், பனிமூட்டம் அதிகம் இருக்கும்போது, ஆக்சிஜன் மிகவும் குறைவாக இருக்கும். அதனால் ஓடியவர் மூச்சுத்திணறி விழுந்து விட்டார் .”

சிவகுமார் சொன்னதைப் படித்தபோது மனம் கொஞ்சம் கனத்துத்தான் போனது.

ஊட்டிக்கு ஷூட்டிங் புறப்படும்போது முத்துராமன் நினைத்திருப்பாரா ?இங்குதான் தன் வாழ்க்கை முடியப் போகிறது என்று.

முத்துராமன் நடித்த 'நெஞ்சில் ஓர் ஆலயம்' பாடல் நினைவுக்கு வருகிறது :

எங்கே வாழ்க்கை தொடங்கும்

அது எங்கே எவ்விதம் முடியும்

இதுதான் பாதை

இதுதான் பயணம்

என்பது யாருக்கும் தெரியாது.”

ஆம் .

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

தெய்வம் ஏதுமில்லை.

எவரும் எதிர்பாராமல் முத்துராமனின் வாழ்க்கைப் பயணம் முடிந்தது, 1981 ல், அக்டோபர் 16 அதிகாலையில்தான்.

  • 260