இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு எப்போதுமே மவுசு உண்டு. இன்றைய சூழல் இளையராஜா பாட்டு இருந்தால் படம் கன்பார்ம் ஹிட் என்கிற நிலை உருவாகிவிட்டது. இதனால் பெரும்பாலான படங்களில் இளையராஜாவின் பழைய பாடல்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் சிலர் அனுமதி பெற்று பயன்படுத்துகிறார்கள். சிலரோ அனுமதியின்றி பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு பயன்படுத்துவோர் மீது இளையராஜாவும் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அண்மையில் கூட அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக வழக்கு தொடர்ந்திருந்தார் இளையராஜா. அதில் இசைஞானிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை அடுத்து, குட் பேட் அக்லி திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்தே நீக்கிவிட்டார்கள். அப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. தற்போது அதே நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் டியூட் திரைப்படமும் காப்பிரைட் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
இந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன டியூட் திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த ‘நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்’ என்கிற பாடலும், ‘கருத்த மச்சான்’ என்கிற பாடலும் பயன்படுத்தப்பட்டு இருந்தனர். படம் ரிலீஸ் ஆகி வெற்றிநடை போட்டு வரும் நிலையில், தற்போது அந்த பாடல்களால் டியூட் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அப்படத்திற்கு எதிராக வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றமும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதால், இளையராஜா தரப்பில் விரைவில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
சோனி நிறுவனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டியூட் படத்தில் கூட தனது 2 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று இளையராஜா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி செந்தில்குமார், அது தொடர்பாக தனியாக வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் டியூட் படத்தின் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
