Feed Item
·
Added article

பிரசாந்த் அஜீத், விஜய் வரிசையில் இருந்திருக்க வேண்டிய முன்னணி கதாநாயகன். காலமும் சூழலும் யாரை எங்கே தள்ளும் என்பதற்கு உதாரணமாகி எங்கே இருக்கிறார் என்றுகூடத் தெரியாத அளவுக்கு மாறினார் பிரசாந்த். திரைவாழ்வில் தோல்வி… திருமண வாழ்வில் ஏமாற்றம்… உடல் பருமன் என பிரசாந்துக்கு அடுக்கடுக்கான பிரச்னைகள். படங்களில் அல்ல, பட விழாக்களில்கூட பிரசாந்தை பார்க்க முடியாத நிலை. மகனுக்கு ரீ என்ட்ரி கொடுக்க ஒரே துணையாய் உற்ற உறவாய் நின்றவர் அவர் தந்தை தியாகராஜன் தான்.

அந்தாதூன் படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்கிய தியாகராஜன் பிரசாந்தை அதில் நடிக்க வைத்தார். ஜோதிகாவை வைத்து ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இயக்கிய பெட்ரிக் தான் இந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், பிரசாந்துக்கும் அவருக்கும் ஒத்துப்போகவில்லை. அடுத்து இன்னொரு இயக்குநர் மாறினார். அவரும் செட்டாகவில்லை. ஒருகட்டத்தில் மகனின் மனமறிந்து இயக்க தானே இயக்குநராக முடிவெடுத்தார் தியாகராஜன்.

ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அல்ல… மூன்றரை வருடங்கள் அந்தகன் படத்தை அணு அணுவாகச் செதுக்கினார்கள். “அந்தகன் ரிலீஸாக வாய்ப்பே இல்லை” என்கிற அளவுக்கு சிலர் அவதூறு பரப்பினார்கள். ஆனால், பிரசாந்தை மறுபடி மக்கள் முன்னால் நிறுத்தி தள்ளாத உடல் நிலையிலும் தியாகராஜன் ஒவ்வொரு ஊராகச் சென்றார். உற்சாகமாகப் பேசினார். “என் மகனுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. இனி அவன் ஓடிக்கொண்டே இருப்பான்…” என பேட்டி கொடுத்தார்.

்தகன் படம் இப்போது மரியாதையான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ப்ளூ சட்டை மாறனே புகழ்ந்து தள்ளுகிற அளவுக்கு பிரசாந்த் நடிப்பு பெயர் வாங்கி இருக்கிறது. அத்தனை பேர் கைவிட்ட நிலையிலும் அப்பா என்கிற உறவு பிரசாந்தை மறுபடியும் முன்னணி ஹீரோவாக்கி இருக்கிறது. மகனை மறுபடியும் ஒரு வெற்றியாளனாகப் பெற்றெடுத்து இருக்கிறார் தியாகராஜன். ‘தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்பது இதுதான்…

  • 90