முன்னொரு காலத்தில் தேவாசுரப் போர் மிக கடுமையாக நடந்தது. இப்போரில் தேவர்கள் தோற்றனர். தோற்ற தேவர்கள் பிரம்மாவிடம் ஓடிச் சென்று தங்கள் பரிதாபமான நிலையைக் கூறி வருந்தினர். அப்பொழுதெல்லாம் பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. நான்கு தலைகள் வடிவுக்கேற்ற தலையாகவும், ஐந்தாவது தலை ஒரு கழுதையின் தலையாகவும் இருந்தது. அவர்கள் குறையைக் கேட்ட பிரம்மன், "நீங்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டால் அவர் ஒருவரால்தான் அசுரர்களை அழிக்க முடியும். ஆகவே செல்லுங்கள்" என்று ஆணையிட்டான். தேவர்கள் சிவனிடம் முறையிட அவர்கள்பால் இரக்கம் கொண்ட சிவன் தான் ஒற்றையாக நின்று அசுரர்களுடன் போர் தொடுத்தார். அசுரர் படை சின்னாபின்னமாகியது. தேவர் உலகத்தைக் கடந்து, பூமிக்கு ஓடி, அங்கும் துரத்தப்பட்ட காரணத்தால் கீழ் உலகம் சென்றனர். சிவபிரான் தான் ஒருவராக நின்று போர் தொடுத்தமையின், அவர் உடம்பிலிருந்து வியர்வைத் துளிகள் வெளிப்பட்டுத் தரையில் சிந்தின. அந்தத் துளிகள் ஒவ்வொன்றிலிருந்தும் மாத்ரிகள் எனப்படும் சிவ கணங்கள் தோன்றின. இப்பொழுது இந்த மாத்ரிகளும் அசுரர்களை விரட்டியடித்தன. ஒருவாறு அசுரர்கள் ஓடி மறைகின்ற நிலையில் போரில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. கங்கைக் கரையில் ஏனைய தேவர்களோடு தங்கியிருந்த பிரம்மாவின் கழுதை வடிவுடைய ஐந்தாவது தலை அசுரர்களைக் கூவி அழைத்தது.
'நீங்கள் ஏன் அஞ்சி ஓடுகிறீர்கள்? மீண்டும் வந்து சண்டையைத் துவக்கினால் உங்களுக்கு உதவியாக நான் இருக்கிறேன்' என்று அவர்களைக் கூவி அழைத்தது. இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்கள் பிரம்மன் தங்களுக்குத் துணையாக இருக்க, அவர் ஐந்தாவது தலை தங்கள் விரோதிகளாகிய அசுரர்களுக்குத் துணை போகிறேன் என்று கூறியது பெரும் கலக்கத்தை விளைவித்தது. செய்வதறியாது தேவர்கள் ஓடிச்சென்று விஷ்ணுவிடம் முறையிட்டனர். அதைக்கேட்ட விஷ்ணு, "பிரம்மனுடைய ஐந்தாவது தலையை நான் கிள்ளிவிட முடியும். அதிலும் ஓர் ஆபத்து இருக்கிறது. கிள்ளப்பட்ட தலை கீழே விழுந்தால் பூமி சுக்கு நூறாகிவிடும். அதனால் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சிவனிடம் சென்று முறையிடுங்கள்" என்று கூறினார். தேவர்கள் சிவ பிரானிடம் சென்று முறையிட்டு அத் தலை கீழே விழுந்தால் பூமிக்கு நேரக்கூடிய விபத்தையும் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட சிவபெருமான் சற்று யோசித்துவிட்டு, "கவலை வேண்டாம். நானே அந்தத் தலையைக் கிள்ளி எடுத்து அந்த மண்டை ஓட்டை என் கையிலேயே வைத்துக் கொள்கிறேன்" என்று கூறினார். தாம் கூறியபடியே பிரம்மனுடைய ஐந்தாவது தலை கழுதைத் தலையைக் கிள்ளி எடுத்து அந்த மண்டை ஓட்டைச் சிவபிரான் கையிலேயே வைத்துக் கொண்டார். அன்றிலிருந்து பிரம்மா 'சதுர்முகன்' (நான்முகன்) என்று அழைக்கப்பட்டார். பிரம்மாவின் தலை கிள்ளப்பட்ட இடம் பிரம்ம தீர்த்தம் என்றழைக்கப்பட்டது. சிவபிரானின் வியர்வையில் கிளம்பிய மாத்ரிகள் அசுரர்களைக் கொன்ற இடம் 'மாத்ரி தீர்த்தம்' என்று வழங்கப்படுகிறது.