திருவிளையாடலில் நடந்த அனுபவம்
க்ளாசிக் சினிமாவில் காமெடியில் கலக்கிய முக்கிய நடிகர்களில் ஒருவர் நாகேஷ். மனமுள்ள மறுதாரம் என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நாகேஷ், எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். காமெடி வசனங்கள் மட்டுமல்லாமல் தனது உடல்மொழியாலும் ரசிகர்களை சிரிக்க வைத்த நாகேஷ் ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
அதேபோல் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி கணேசன் தான். அவரை போல் யாரும் நடிக்க முடியாது, அவர் ஒரு நடிப்பு பல்கலைகழகம், அவரை தான் இன்றைய நடிகர்கள் பலரும் பின்பற்றி வருகிறார்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். சிவாஜி நாகேஷ் கூட்டணியில் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் திருவிளையாடல் படத்தில் அந்த தருமி கேரக்டரில் நாகேஷ் தான் நடிக்க வேண்டும் என்று சிவாஜி விரும்பியதாகவும் தகவல்கள் உள்ளது.
இதுகுறித்து ஓர் பேட்டியில் நாகேஷ் கூறுகையில்,அதேபோல் திருவிளையாடல் படம் எனக்கு தருமி வேஷம் என்ற உடனே நான் அதில் எதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
அப்போது மைலாப்பூர் கபாலீஸ்வர் கோவிலில் ஒல்லியான ஒருவர் செய்ததை தான் நான் திருவிளையாடல் படத்தில் செய்தேன். ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையில் கிடைத்த 2 மணி நேர இடைவெளியில் தான் அந்த காட்சியில் நடித்தேன். அந்த வருடத்தில் தான் நான் நடித்த 46 படங்கள் வெளியானது. அப்படி என்றால் நான் எவ்வளவு பிஸி என்று நினைத்துப்பாருங்கள்.
இந்த படத்தின் ஷூட்டிங்கில் சிவாஜிக்கு சிவன் வேஷம் போட லேட் ஆனும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் நான் என் காட்சிகளை முதலில் வசனம் பேசிவிடுகிறேன் என்று கேமராமேனிடம் சொன்னேன் அவரோ நீங்கள் வசனம் பேசும்போது சிவாஜி வந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டார். ஆனாலும் அவரை சமாதானப்படுத்தி நான் நடித்துக்கொண்டிருந்தேன்.
ஆனால் நான் நடிக்க தொடங்கிய உடனே சிவன் வேடத்தில் சிவாஜி செட்டுக்குள் வந்துவிட்டார். இதை பார்த்து கடுப்பான சிவாஜி இயக்குனரிடம் என்ன நாகேஷ் நடிச்சிட்டு இருக்கான் என்று கேட்டார். அதன்பிறகு இயக்குனர் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். நடித்து முடித்து அந்த காட்சியை பார்த்த சிவாஜி நாகேஷ் நல்ல நடிச்சிருக்கான். ஒரு சில இடங்களில் மட்டும் சரியாக வரல அந்த இடங்களில் மீண்டும் நடிக்க சொல்லுங்கள் என்று சிவாஜி சொன்னார்.
தீபம் படத்தில் ஒரு காட்சியில் ரஹீம்பாய் என்று அவர் என்னை கூப்பிட வேண்டும். அவர் கனீர் குரலில் கூப்பிட்டார் ஆனால் நான் ஒன்றுமே பேசிவில்லை. கேமரா கட் ஆனதும் சிவாஜி என்னை அழைத்து என்னாச்சி உனக்கு என்று கேட்க, ஒரு வேலைக்காரன் துரோகம் செய்துவிட்டதால் இந்த வேலைக்காரனிடம் ஆதரங்கத்தை தீர்க்க பேசுகிறீர்கள். அப்படி இருக்கும்போது உங்கள் குரலில் கம்பீரம் இருக்க கூடாது கனிவு தான் இருக்க வேண்டும் என்று சொன்னேன்.
அதன்பிறகு நான் எப்படி நடிக்க வேண்டும் நீயே நடித்து காட்டு என்று சொன்னார். நான் தயங்கினேன். ஆனால் அவர் நடிக்க சொல்லி வற்புறுத்தியதால் நான் நடித்து காட்டினேன். அதை அவருக்கே உண்டான ஸ்டைலுடன் நடித்து முடித்தார். எனக்கே அழுகை வந்துவிட்டது. நடித்து முடித்தவுடன் எப்படி டா என்று என்னை பார்த்து கேட்டார் நான் கோடு தான் போட்டேன் நீங்கள் ரோடே போட்டுவிட்டீர்கள் என்று சொன்னேன் என நாகேஷ் கூறியுள்ளார்.