நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.
தீவிர கார் பந்தய வீரரான அஜித், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணியையும் சொந்தமாக வைத்திருக்கிறார். இந்த அணி, துபாய், பெல்ஜியம், இத்தாலி போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றது.
அடுத்து மலேசியாவில் நடக்கும் 24 ஹெச் கார் பந்தயத்தில் பங்கேற்கிறது. இதற்காக அவர் மலேசியா சென்றுள்ளார். இந்நிலையில் அங்குள்ள பத்து மலை முருகன் கோயிலில் அவர் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். இந்த கோயிலில்தான் அவர் நடித்த ‘பில்லா’ படத்தில் வரும், ‘சேவல் கொடி பறக்குதடா’ பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அஜித் பத்துமலை முருகன் கோயிலில் சுவாமி கும்பிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
