‘சிவாஜி’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ஸ்ரேயா சரண் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ரஜினி சாரை நேரில் பார்த்தபோது பிரமிப்படைந்தேன். அவருடன் பணியாற்றுவது அதுவே முதல் முறை என்பதால், பதற்றத்தில் உறைந்துவிடுவேனோ என்று பயந்தேன்.
அதனால் ஒத்திகைக்கு முன்பாக என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க ஷங்கர் சாரிடம் கேட்டுக் கொண்டேன். அதைக் கேட்டு அவர் சிரித்தார். அந்தப் படம் குறித்த விவரங்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்ததால் அதில் யார் இருக்கிறார்கள் அல்லது என்ன நடக்கிறது என்பது பற்றி முதலில் எனக்கு எதுவும் தெரியாது.
அப்போது ஷங்கர் சார், ‘ரஜினி சாரை சந்தியுங்கள்’ என்று சொன்னதைக் கேட்டதும் ஆச்சரியப்பட்டேன். அந்த நேரத்தில் ‘வாஜி வாஜி’ பாடலுக்கான ஒத்திகையும் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்தன. படப்பிடிப்பின்போது, ரஜினி சார் என்னை இயல்பாக உணர வைத்தார்.
என் நெருங்கிய நண்பரைப் போலவே என்னிடம் பழகினார். அதில் மிகவும் சுவாரஸ்யமான மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். ரஜினி சார் மிக மிக எளிமையானவர். படப்பிடிப்புத் தளத்துக்கு வரும்போது, எல்லோரையும் சமமாகத்தான் நடத்துவார்.
அவருடன் அந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. ஆனால் அவர் ஏற்கெனவே சூப்பர்ஸ்டார். ‘உன் வேலையை நேசி, தொடர்ந்து கற்றுக்கொண்டே இரு’ என்று அவர் எப்போதும் என்னிடம் சொல்வார்.
மிகவும் சிரமப்பட்டு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்ததாக அவர் என்னிடம் கூறினார். சாதாரண நிலையில் இருந்து இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக உயர்ந்த பிறகும் எளிமையாகவும் பணிவாகவும் இருக்கிறார் என்பதைப் பார்ப்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. அவருக்குச் சிறந்த நகைச்சுவை உணர்வும் உண்டு, படப்பிடிப்புத் தளத்தில் அவ்வப்போது நாடகத்தனமான செயல்களையும் செய்து கொண்டிருப்பார். இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.