Feed Item
·
Added article

யார் இந்த சரளாம்மா?

எந்த வி.ஐ.பி-யின் பிறந்தநாள் வந்தாலும், தொலைக்காட்சியில், ‘நூறாண்டு காலம் வாழ்க... நோய் நொடியில்லாமல் வளர்க... ஊராண்ட மன்னர் புகழ்போலே... உலகாண்ட புலவர் தமிழ்போலே...’ என்று பின்னணியில் ஒலிக்கிற மூவர் குரல்களில் ஒரு குரல் இவருடையது. ‘பேசும் தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பாடிய சரளா இப்போது எப்படியிருக்கிறார்?

‘`பக்கவாதம் வந்து ஒரு வரி பாடறதுக்கே இன்னிக்குப் படாதபாடு பட்டுக்கிட்டிருக்குற நான், 50 வருஷத்துக்கு முன்னாடி வாழ்வாங்கு வாழ்ந்தவம்மா. பெரியார், கலைஞர், எம்.ஜி.ஆர், கண்ணதாசன், வாலின்னு என் குரலைப் பாராட்டாத வி.ஐ.பி-க்களே இல்லை. அந்த அளவுக்குக் குரலால் கொடிகட்டிப் பறந்தவ நான்’’ என்கிற சரளாம்மாவின் குரலில் இப்போதும் இருக்கிறது கம்பீரம்.

‘`மயிலாப்பூரில் பிறந்தேன். இன்னிக்கு ஊருக்கு வெளியே இந்தச் சின்ன கூண்டுக்குள்ள இருக்கேன். சின்ன வயசுல சினிமாப் பாட்டுன்னா உயிரு. அம்மா பாடகி, அப்பா பாடகர் போன்ற பின்னணியெல்லாம் எனக்குக் கிடையாது. பாட்டுச் சொல்லிக்கொடுக்கக் குருவும் கிடையாது. சினிமா பாடல்களைக் கேட்டு நானா பாடக் கத்துக்கிட்டேன். அம்மாவுக்கு நான் பாட்டுப் பாடறது ரொம்பப் பிடிக்கும். அவங்க சப்போர்ட் இருந்ததால, எம்.ஆர்.ராதா நாடகம், தங்கவேலு நாடகத்திலெல்லாம் பாட்டுப் பாட ஆரம்பிச்சேன்.

ஒரு தடவை மயிலாப்பூர் ஆர்.ஆர் சபாவில் நடந்த நாடகத்தில் ‘பஞ்சவர்ணக்கிளி’ படத்தில் வருகிற ‘சத்தியம் சிவம் சுந்தரம்' பாடலைப் பாடிக்கிட்டிருந்தேன். அப்போ என் பாட்டைக் கேட்ட இசையமைப்பாளர் ராமமூர்த்தி (விஸ்வநாதன்), ‘உச்ச ஸ்தாயியிலும் எவ்வளவு இனிமையா இருக்கு இந்தப் பொண்ணோட குரல்’னு சொல்லி ‘தேன்மழை’ படத்துல பின்னணிப் பாடகியா அறிமுகப்படுத்தினார். அதுக்கப்புறம் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் ‘வருவாயா வேல்முருகா’, சீர்காழி கோவிந்தராஜனுடன் ‘சிந்தனையில் மேடைகட்டி’, இளையராஜா வுடன் ‘உனக்கெனத்தானே இந்நேரமா’... இப்படி 20 பாடல்கள்தான் சினிமாவில் பாடியிருக்கேன். ஆனா, மேடைக் கச்சேரிகளில் நான் பாடின பாடல்களை எண்ணவே முடியாது.

85 வயசாயிடுச்சு. நான்கு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மேடைக் கச்சேரி பண்ணிக்கிட்டுதான் இருந்தேன். திடீர்னு வந்த பக்கவாதம் பாட முடியாதபடிக்கு என் குரலை எடுத்துட்டுப் போயிடுச்சு. எவ்வளவோ மேடு பள்ளங்கள் பார்த்துட்டேன். இஸ்லாமியப் பாடல்கள் பாடறதுல ஹனீபாவுக்கு அப்புறம் சரளாதான்னு பெயர் வாங்கினது ஒரு காலம். பாட முடியாம முடங்கிக் கிடக்குறது ஒரு காலம்’’ என்கிறவர் பழைய நினைவுகளில் சில நொடிகள் மூழ்குகிறார்.

தன்னுடைய 13-வது வயதில் பாட ஆரம்பித்தவர் தொடர்ந்து 60 வருடங்கள் பாடியிருக்கிறார்.

  • 37