பிரபல நடிகையான குஷ்பு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தனக்கும், கார்த்திக்கும் இடையே நடந்த மோதல் குறித்து பேசினார்.
அவர் பேசும் போது, “ நாங்கள் நடிகர் கார்த்தியை முரளி என்றுதான் அழைப்போம். அப்போது நான் ஒரு குறிப்பிட்ட பார்லருக்கு அடிக்கடி செல்வேன். அங்கு முரளியும் வருவார். அங்குதான் அவரை நான் முதல் முறையாக பார்த்தேன்.
அப்போது அவர் நடித்த அக்னி நட்சத்திரம், மௌன ராகம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. இதனால் அவரை பார்த்த அந்த கணம், நான் அப்படியே உறைந்து போய் நின்றேன். எங்களது நட்பு அங்கிருந்துதான் தொடர்ந்தது.
முதல் முறையாக நாங்கள் வருஷம் 16 திரைப்படத்தில் தான் ஒன்றாக இணைந்து நடித்தோம். எனக்கு அவருடன் இணைந்து வேலை செய்வது என்பது மிகவும் ஈசியாக இருந்தது. காரணம் நாங்கள் முன்னரே ஒருவருக்கொருவர் நன்றாக பழக்கமாகி இருந்தோம்
வருஷம் 16 திரைப்படத்திற்குப் பிறகு நாங்கள் பெரிதாக எந்த திரைப்படங்களிலும் ஒன்றாக இணைந்து பணியாற்றவில்லை. கிழக்கு வாசல் திரைப்படத்தில் மட்டும் இணைந்து நடித்தோம். அந்த இடைவெளிக்கு, ஒரு சண்டை காரணமாக அமைந்தது. இதனால் நாங்கள் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தோம்.
அவரிடம் சென்று படத்தில் குஷ்பு தான் கதாநாயகி என்று சொன்னால், அவர் கதாநாயகியை மாற்றுங்கள் என்று சொல்வார். என்னிடம் யாராவது வந்து கார்த்திக் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டால், இல்லை இல்லை வேண்டாம் நீங்கள் வேறு கதாநாயகியை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன்
அதன் பின்னர் விக்னேஸ்வர் திரைப்படத்தில் தான் நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தோம். அதற்கு காரணம் அந்த படத்தின் இயக்குனர் ரகு. ரகு எங்களிடம் இது நண்பர்களுக்கு இடையே வந்திருக்கும் பிரச்சினை, இதனையும், தொழிலையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் என்று சமாதானப்படுத்தினார்.
இதனையடுத்து நான் அப்படி என்றால் நீங்கள் முரளியிடம் சென்று சம்மதம் வாங்கி வாருங்கள் என்று சொன்னேன். முரளியோ, என்னிடம் சம்மதம் வாங்கி வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார். இதனையடுத்து இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசுங்கள் என்று சொல்லி எங்களை உட்கார வைத்து பேச வைத்தார்கள். அதன் பின்னர்தான் நாங்கள் விக்னேஸ்வர் திரைப்படத்தில் இணைந்து நடித்தோம். அங்கு ஆரம்பித்த நட்பானது இன்று வரை தொடர்கிறது. கார்த்தி எனக்கு எப்போதுமே மிகவும் ஸ்பெஷல் தான். கார்த்தியிடம் ஒரு விதமான மாய சக்தி இருக்கிறது.