வறுமைக்கோட்டில் குடும்பம் ஒன்று இருந்தது. வாழ்ந்து கெட்ட குடும்பம். தலைவன், தலைவி, மகன், மகள் என நான்கு பேர் இருந்தனர். சோம்பேறிகள் என எந்த வேலையும் கிடைக்கவில்லை. கால் வயிற்றைக் கூட தண்ணீரில்தான் கழுவிக் கொண்டனர். கண்ணீர் வடிக்கக் கூட தெம்பற்ற நிலை.
இவர்களின் நிலையைப் பார்த்து பரிதாப்பட்ட ஒருவர், அந்த ஊரின் மலையடிவாரத்தில் காலம் கழித்துக் கொண்டிருக்கும் ஒரு சாமியாரைப் போய் பாருங்கள். ஏதாவது அருள்வாக்கு சொல்வார் என்றார்.
சரியென்று அடுத்த நாள் அதிகாலையிலேயே கிளம்பி சாமியை பார்க்க சென்றார். ஒரு ஓலைக் குடிசையில் சாமி சப்பணமிட்டு அமர்ந்து ஏதோ தியானம் செய்து கொண்டிருந்தார். தியானத்தை முடிக்கும் வரை காத்திருந்த அவர், "சாமி நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்" என்றார்.
"சொல் மகனே என்ன பிரச்சினை உனக்கு ? "
"சாமி ... எங்க குடும்பத்துல என்னையும் சேர்த்து நாலு பேர் இருக்கோம். வசதியா வாழ்ந்து நொடிச்சுப் போனதால இந்த ஊருல எங்கள்ல யாருக்குமே வேலை கிடைக்கல. நல்லா சாப்பிட்டு பல மாசம் ஆகிப் போச்சு. உங்களை சந்திச்சா ஏதாவது நல்ல வழி சொல்வீங்கனு ஒருத்தர் சொன்னார். அதான் வந்தேன் சாமி " என்றார் பவ்யமாக.
"உனக்கு உழைத்து சாப்பிட ஆசையா, முன்பு போல் உட்கார்ந்து சாப்பிட ஆசையா? "
"உட்கார்ந்து சாப்பிட்டு கெட்டது போதும். இனி உழைத்து சாப்பிடத்தான் ஆசை சாமி "
"சரி அதோ அந்த மூலையில் ஒரு மூட்டை அரிசியும் அந்த அரிசி தீரும் வரைக்குமான மளிகைப் பொருட்களும் இருக்கின்றன. எடுத்துக் கொள் "
"சாமி நான் உட்கார்ந்து சாப்பிட விரும்பவில்லை. இது தீர்ந்த பின் மீண்டும் இதே நிலைக்குதான் வருவேன். நிரந்தர தீர்வு தாருங்கள் சாமி "
"அவசரப்படாதே மகனே. நான் சொல்வதை மட்டும் செய். ஆனால் ஒரு நிபந்தனை. இன்று கால் படி அரிசியை சமை. நாளை அதை இரட்டிப்பாக்கி அரை படி சமை. நாளை மறுநாள் அதையும் இரட்டிப்பாக்கி ஒரு படி அரிசி சமை. இப்படியே ஒவ்வொரு நாளும் முதல் நாளை விட இரட்டிப்பாக சமை. ஒரு அரிசி கூட வீணாக கூடாது. என்னைக் கேட்காமல் உன் வீட்டார் தவிர யாருக்கும் சாப்பாடு போடக் கூடாது"
"சாமி இதெப்படி நிரந்தர தீர்வாகும்? "
"நான் சொல்வதை மட்டும் செய்வதென்றால் இவற்றை எடுத்துப் போ. இல்லையென்றால் நீ இப்படியே போகலாம் "
"நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன். கோவப்படாதீங்க சாமி"
சாமி சிரித்துக் கொள்ள, அரிசியையும் மளிகைப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்.
அன்று கால் படி அரிசி சமைத்து கொஞ்சமாய் குழம்பு வைத்து நான்கு பேரும் சாப்பிட்டார்கள். அனைவருக்கும் அரை வயிறு நிரம்பியது. அடுத்த நாள் அரைப்படி சமைத்து குழம்பு வைத்து வயிறாற சாப்பிட்டார்கள். மூன்றாம் நாள் ஒரு படி சமைத்து சாப்பிட்டது போக பாதி சாதம் மிஞ்சியது.
வீணாக்க கூடாதே என்ன செய்வது என யோசித்தவர், அடுத்த அரை மணி நேரத்தில் சாமியிடம் ஓடினார்.
"சாமி நீங்கள் சொன்னது போல ஒவ்வொரு நாளும் இரட்டிப்பாக சமைத்தேன். ஆனால் இன்று பாதி மிஞ்சி விட்டது. என்னைக் கேட்காமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றீர்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டும். எங்களுக்கு அரைப்படியே போதுமானது. அதை மட்டும் தினமும் சமைத்துக் கொள்ளவா? "
"அரிசி தீரும் வரை இரட்டிப்பாக சமைப்பதை நிறுத்தக் கூடாது என்பது நிபந்தனை. மிஞ்சியதை அக்கம் பக்கத்தினருக்கு கொடு"
"சரிங்க சாமி " கும்பிட்டு விட்டு கிளம்பினார். வீட்டிற்கு சென்றதும் மிஞ்சிய சாதத்தை அக்கம் பக்கத்தினர் நான்கு பேருக்கு கொடுத்தார். அவர்கள் சாப்பிட்டு விட்டு "ஆகா அருமையான சாப்பாடு" என புகழ்ந்தார்கள்.
மறுநாள் இரண்டு படி அரிசியைப் பொங்கி சாப்பிட்டது போக பதினைந்து பேர் அளவு சாப்பாடு மிஞ்சியது. இப்படியே போனால் அரிசி ஒருவாரத்தில் முடிந்து விடுமே என்ற கவலையில் மீண்டும் சாமியைப் பார்க்க ஓடினார்.
"சாமி இன்னைக்கு பதினைந்து ஆள் சாப்பாடு மிஞ்சி விட்டது. இப்படி சமைத்தால் ஒருவாரம் கூட அரிசி வராதே "
"நீ சுவையாக சமைக்கிறாயா? "
"ஆமாம் சாமி. நேற்று சாப்பிட்ட அனைவரும் எந்த ஓட்டல்லயும் இவ்வளவு ருசியான சாப்பாடு கிடைப்பதில்லைனு பேசிக்கிறாங்க "
"அப்படியானால் மீதமாகும் சாப்பாட்டை நீ விற்பனை செய்"
"சரிங்க சாமி " என்று சந்தோசமாய் வணங்கி வீட்டுக்கு வந்தவர் சாப்பாடு நாற்பது ரூபாயென விற்க ஆரம்பித்தார். பத்து சாப்பாடு மட்டுமே விற்றது. அஞ்சு சாப்பாடு மிஞ்சியது.
அடடா இன்னைக்கு பதினைஞ்சு சாப்பாடே விக்கல. நாளைக்கு எப்படி நாப்பது சாப்பாட்டை விக்கிறது என்ற கவலை வர அடுத்த அரைமணி நேரத்தில் சாமியின் முன் நின்றார்.
"சாமி பத்து சாப்பாடுதான் வித்துச்சு. இன்னைக்கே அஞ்சு மிஞ்சிருச்சு. நாளைக்கு நாலு படி பொங்குனா வீணாப் போகுமே சாமி "
"ஒரு சாப்பாடு எவ்வளவுனு வித்தே? "
"நாப்பது ரூபாய்க்கு வித்தேன் சாமி "
"ஒரு சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவாகும்? "
"ஒரு சாதத்துக்கு அஞ்சு ரூபா வச்சா குழம்பு மற்றும் தொட்டுக் கொள்ளும் வகையறாக்களுக்கு பத்து ரூபாயாகும். மொத்தம் ஒரு சாப்பாட்டுக்கு பதினைந்து ரூபாய் செலவாகும் சாமி "
"உன் உழைப்புக்கு அஞ்சு ரூபாய் சேர்த்து வச்சாலும் ஒரு சாப்பாடு தயாரிக்க ஆகும் செலவு இருபது ரூபாயை தாண்டாது. நீ அதையும் இரு மடங்காங்கி விற்றால் எப்படி விற்பனையாகும்? "
"அப்படி விற்றால்தானே நாளை ஏதோ ஒரு வகையில் நஷ்டம் வரும் போது சமாளிக்க முடியும் "
"இதுதான் நிறையப் பேர் செய்யும் தவறு. குறைந்த லாபம் அதிக விற்பனை என்பதே புத்திசாலிகள் கடைபிடிக்கும் அழகான வியாபார முறை. நாம் செய்யும் தொழிலில் அனைவருக்கும் பயன் இருக்க வேண்டும். நாம் மட்டும் வாழ்ந்தால் போதுமென நினைப்பவன் நல்ல வியாபாரி ஆக முடியாது "
"இப்போது நான் எவ்வளவு விலை வைக்க வேண்டும் சாமி "
"உன் குடிசையின் முன்னால், 'வீட்டுமுறை சாப்பாடு ரூபாய் இருபது மட்டும்' என்று ஒரு அட்டையில் எழுதி தொங்கவிடு "
"சரிங்க சாமி " என்று அரை மனதுடனே நகன்றார் அவர்.
அடுத்த நாளிலிருந்து இருபது ரூபாய்க்கு சாப்பாடு விற்பனை செய்ய சக்கை போடு போடத் தொடங்கியது வியாபாரம்.
நான்கே நாட்களில் அரிசி மூட்டை காலியாக, அதுவரை சேர்ந்த பணத்தை எடுத்துக் கொண்டு சாமியிடம் சென்றார். அவர் முகத்தில் பார்த்த சந்தோசத்தை கண்டு சாமி கேட்டார்.
"என்ன மகனே மகிழ்ச்சியாய் இருக்கிறாயா? "
"தங்கள் ஆசியாலும் ஆலோசனையாலும் மிக நலமாக இருக்கிறேன் சாமி. இந்தாங்க ... இதுவரை சாப்பாடு விற்ற பணம். இது உங்களைச் சேர வேண்டியது சாமி"
"அதை நீயே வைத்துக் கொள். அதில் மூன்று மூட்டை அரிசியும் மூன்று பை மளிகைப் பொருட்களும் வாங்கி, ஒரு மூட்டையை நீ வைத்துக் கொள் . நான் கொடுத்த மூட்டைக்கு இரட்டிப்பு கணக்கில் இரண்டு மூட்டைகளை எனக்குக் கொடுத்து விடு. இனி நீ உன் வியாபாரத்திலிருந்து எனக்கு எதுவும் தர வேண்டியதில்லை"
"உங்களுக்கு எதற்கு சாமி இரண்டு மூட்டை அரிசியும் மளிகையும் "
"உன்னைப் போல் இன்னும் பல தங்க மகன்களை உருவாக்கும் பணி இருக்கிறது மகனே "
"மகானே" என்று சாமியின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தார் அவர்...
