நடிகை அர்ச்சனா!
கருப்பாயி என்று என்னை புறக்கணித்தார்கள் இயக்குனர்கள்!
சென்னை, அடையாறு திரைப்பட கல்வி நிறுவனத்தில் படித்தபடியே, படங்களில் நடிக்கவும் முயற்சி செய்தேன். அப்போது,
பல இயக்குனர்கள் என்னை புறக்கணித்தனர். நடிப்பு பயிற்சி பட்டறையில், என்னுடன் நடித்த, ஹாலிவுட் இயக்குனர் வில்லியம் க்ரீவ்ஸ் என்பவர், என் நடிப்பை பாராட்டியதுடன், இயக்குனர் மற்றும் கேமராமேன் பாலு மகேந்திராவிடம் அறிமுகம் செய்து வைத்தார். என்னை, நிறைய புகைப்படங்கள் எடுத்த பாலு மகேந்திரா, ஒரு வாரம் கழித்து அழைத்தார்.
'என் படத்தில் நீ நடிக்கிறாய்' என்றார். 'என்ன பாத்திரம் சார்...' என்றேன். 'கதாநாயகியே நீ தான்' என்றார். நீங்கள் கேட்டவை படத்தில் என்னை ஹீரோயின் ஆக்கினார்.அந்தப் படத்தின், 'ஷூட்டிங்' நடந்து கொண்டிருந்த போது, பத்திரிகையாளர் ஒருவர், இயக்குனரான அவரிடம், 'பல இயக்குனர்கள், இந்த நடிகையை புறக்கணித்த நிலையில், எதன் அடிப்படையில், இவரை நடிக்க வைக்கிறீர்கள்?' எனக் கேட்டார். நானும் அருகில் இருந்தேன்.
அவருக்கு நேரடியாக பதில் சொல்லாத அவர், ஒரு தாளை எடுத்து, அதில் சில வரிகளை, ஆங்கிலத்தில் எழுதி, அந்த பத்திரிகையாளரிடம் காண்பித்து, தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார்; என்னிடம் காட்டவில்லை. அவரது அம்மா, சொந்த ஊரில், சொந்தமாக வீடு கட்ட, பட்ட அவஸ்தைகளை மையமாக வைத்து, வீடு என்ற படத்தை அவர் எடுத்தார். அதிலும், நாயகி நான் தான். அந்தப் படம், எனக்கு, முதல் தேசிய விருதை பெற்றுத் தந்தது.
அதை என்னிடம் சொல்ல வந்த அவர், தன் சட்டைப் பையில் வைத்திருந்த தாளை எடுத்து, 'இது தான், அந்த பத்திரிகையாளரிடம் நான் அப்போது எழுதி காண்பித்தது; இப்போது பார்...' எனக் கூறி கொடுத்தார். அதை வாங்கி படித்தேன்.'இந்தப் பெண், எதிர்காலத்தில், இந்திய சினிமாவின், முக்கிய நடிகையாக மாறுவார்; தேசிய விருது பெறுவார்' என, எழுதியிருந்தது.அதைப் படித்ததும், கண்ணீர் வந்தது. 'என்னவொரு தீர்க்க தரிசனம் கொண்டவர் அவர்' என்ற பெருமிதம் ஏற்பட்டது.
என் குரு, நண்பர், நலன் விரும்பி அவர்.அவருடன் என்னை இணைத்து, ஊடகங்களில், 'கிசுகிசு'க்கள் வந்ததால், இருவரும் பேசி, இணைந்து பணியாற்றுவதில்லை என, முடிவு செய்து, பிறரின் பல படங்களில் நடித்தேன். அதன் பின், 14 ஆண்டுகள், 'பிரேக்!' பிறகு, மீண்டும் நடிக்க வந்துள்ளேன். இப்போதும் சில படங்களில், அம்மா, 'ரோல்'களில் நடிக்கிறேன். அதற்கு காரணம், பாலு மகேந்திரா தான்